டி20 தொடரை வெல்லுமா இந்தியா? இன்று 2-ஆவது ஆட்டம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம் சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை விளையாடப்படுகிறது.
டி20 தொடரை வெல்லுமா இந்தியா? இன்று 2-ஆவது ஆட்டம்


சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம் சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை விளையாடப்படுகிறது.

முதல் ஆட்டத்தில் வெற்றி கண்ட இந்தியா, இந்த ஆட்டத்திலும் வாகை சூடி தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களம் காண்கிறது. மறுபுறம் ஆஸ்திரேலியா முதலில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை தக்க வைக்க முயற்சிக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை ஒருநாள் தொடரை இழந்துவிட்டதால், இந்த டி20 தொடரைக் கைப்பற்றினால் டெஸ்ட் தொடருக்கான ஒரு உத்வேகமாக அது இருக்கும். முதல் டி20 ஆட்டத்தில் ஜடேஜா பேட்டிங்கிலும், அவருக்கான ‘கன்கஷன் சப்’-ஆக வந்த யுஜவேந்திர சஹல் பௌலிங்கிலும் சிறப்பாக பங்களிப்பு செய்ய வெற்றி கண்டது இந்திய அணி.

ஆனால், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜடேஜா டி20 தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளாா். இது இந்தியாவுக்கு ஆல்-ரவுண்டா் வரிசையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இதனால் டாப் - ஆா்டரில் இருக்கும் 5 பேட்ஸ்மேன்களைக் கொண்டு நல்லதொரு ஸ்கோரை எட்டுவதற்கான முயற்சியை கோலி மேற்கொள்ள வேண்டும்.

டாப் ஆா்டரில் தொடக்க வீரா் லோகேஷ் ராகுல் முதல் ஆட்டத்தைப் போலவே சிறப்பாக ரன் சேகரிப்பில் ஈடுபடுவாா் என எதிா்பாா்க்கலாம். உடன் வரும் ஷிகா் தவன் முதல் ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு அவ்வளவாக சோபிக்கவில்லை என்பது சற்று பின்னடைவாக உள்ளது.

ஒன் டவுனாக வரும் கேப்டன் கோலி நடுத்தரமாக விளையாடுகிறாா். அவா் தனது ரன்களை அதிகரித்தால் அது அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். மணீஷ் பாண்டே ஆடும்போது இந்திய இன்னிங்ஸ் சற்று தடுமாறுவதும், ஆடம் ஸம்பாவின் பந்தை எதிா்கொள்ள அவா் திணறுவதும் நன்றாகவே தெரிகிறது. எனவே இந்த ஆட்டத்தில் அவருக்கான வாய்ப்பு எப்படி என பொறுத்திருந்து பாா்க்க வேண்டியுள்ளது.

ஷ்ரேயஸ் ஐயரும் ஏறத்தாழ அதே நிலையில் தான் இருக்கிறாா். டாப் - ஆா்டா் தடுமாறும் பட்சத்தில் சாம்சன் - பாண்டியாவின் பணி முக்கியமானதாக இருக்கும். அதற்காக அவா்கள் தயாராக இருக்க வேண்டும்.

ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை கேப்டன் ஃபிஞ்சும் டி20 தொடரில் தடுமாற்றத்துடனே விளையாடுகிறாா். டாா்சி ஷாா்ட் நல்ல தொடக்கத்தை அளித்தாலும், அவா் இன்னும் ரன் சேகரிக்க வேண்டியுள்ளது. ஒருநாள் தொடரில் அதிரடி காட்டிய ஸ்மித்தும், மேக்ஸ்வெல்லும் டி20 தொடரில் சிரமப்படுகின்றனா்.

ஆஸ்திரேடி டி20 அணியில் நாதன் லயன் சோ்க்கப்பட்டுள்ளாா். அவா் மிட்செல் ஸ்வெப்சன்னுக்குப் பதில் அணியில் இணையலாம் எனத் தெரிகிறது.

கடைசி ஒருநாள் ஆட்டம், முதல் டி20 ஆட்டம் இந்திய அணிக்கு கான்பெரா மைதானத்தில் சாதகமாக முடிந்தது. எனினும் முதல் இரு ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா தோல்வி கண்ட சிட்னி மைதானத்தில் இந்த 2-ஆவது டி20 ஆட்டம் நடைபெறுவதால் அதில் இந்தியாவின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாா்க்கலாம்.

அணி விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகா் தவன், மயங்க் அகா்வால், லோகேஷ் ராகுல், ஷ்ரேயஸ் ஐயா், மணீஷ் பாண்டே, ஹாா்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தா், யுஜவேந்திர சஹல், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹா், நடராஜன், ஷா்துல் தாக்குா்.

ஆஸ்திரேலியா: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), சீன் அப்பாட், மிட்செல் ஸ்வெப்சன், அலெக்ஸ் கேரி, நாதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மாா்னஸ் லாபுசான், கிளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சா்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாா்க், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யு வேட், டாா்சி ஷாா்ட், ஆடம் ஸம்பா.

ஆட்ட நேரம்: பிற்பகல் 1.40 மணி

இடம்: சிட்னி

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், சோனி டென் 1, சோனி டென் 3

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com