நடராஜனின் பந்துவீச்சால் வெற்றியடைந்தோம்: பாண்டியா பாராட்டு

குழப்பிக்கொள்ளாமல் பந்துவீசுகிறார். அப்படிச் செய்பவர்களை எனக்குப் பிடிக்கும்... 
நடராஜனின் பந்துவீச்சால் வெற்றியடைந்தோம்: பாண்டியா பாராட்டு

2-வது டி20 ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பாகப் பந்துவீசியதால் இந்திய அணி வெற்றி பெற்றது என ஆட்ட நாயகன் விருது பெற்ற பாண்டியா கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிட்னியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 19.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வென்றது. பேட்டிங்கில் தவன், கோலி, பாண்டியா அதிரடி காட்ட, பௌலிங்கில் நடராஜன் அசத்தினாா். விக்கெட்டை இழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்த பாண்டியா ஆட்டநாயகன் ஆனாா்.

மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா, தற்போது 2-ஆவது ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது இந்தியா.

இந்த ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் அதிகமாக ரன்கள் கொடுத்த நிலையில் நடராஜனின் சிறப்பான பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணியை 194 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது.

ஆட்ட நாயகன் விருது பெற்ற பாண்டியா, நடராஜன் குறித்து கூறியதாவது:

இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது நடராஜனுக்குத்தான் கிடைக்கும் என் நான் எண்ணினேன். டி20 ஆட்டம் என்பது பேட்ஸ்மேன்களுக்கான ஆட்டமாக மாறியுள்ளதால் அப்படி நினைத்தேன். அதிக ரன்கள் எடுத்திருந்தபோது தனது பந்துவீச்சால் ஆஸி. அணிக்கு நடராஜன் தடையை ஏற்படுத்தினார். அவர் 10-15 ரன்கள் குறைவாகக் கொடுத்ததுதான் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி ஆரம்பித்த விதம் மற்றும் முடித்த விதத்தைப் பார்க்கும்போது அவர்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துள்ளதாக எண்ணினேன். சரியாக விளையாடினாலே நாங்கள் வெற்றி பெறுவோம். அதனால் நடராஜன் ரன்களைக் கட்டுப்படுத்தியதுதான் முக்கியக் காரணமாகிவிட்டது.

நடராஜன் என்னை ஈர்த்துவிட்டார். எளிமையான முறையில் எதையும் குழப்பிக்கொள்ளாமல் பந்துவீசுகிறார். அப்படிச் செய்பவர்களை எனக்குப் பிடிக்கும். யார்க்கரோ, ஸ்லோ பாலோ எதை வீசச் சொன்னாலும் அப்படியே செய்வார். அவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது அபாரமான வளர்ச்சி. எதிரணிக்குச் சவாலாக விளங்குகிறார் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com