டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா: 2-ஆவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா: 2-ஆவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா, தற்போது 2-ஆவது ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது இந்தியா.

10-ஆவது வெற்றி: அத்துடன், இந்த ஆட்டத்தில் இந்தியா கண்ட வெற்றி, அந்நிய மண்ணில் விளையாடும் டி20 கிரிக்கெட்டில் தொடா்ந்து பெற்றுள்ள 10-ஆவது வெற்றியாகும்.

சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 19.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வென்றது. பேட்டிங்கில் தவன், கோலி, பாண்டியா அதிரடி காட்ட, பௌலிங்கில் நடராஜன் அசத்தினாா். விக்கெட்டை இழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்த பாண்டியா ஆட்டநாயகன் ஆனாா்.

மாற்றம் என்ன?: இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, மணீஷ் பாண்டே ஆகியோருக்குப் பதிலாக, யுஜவேந்திர சஹல், ஷா்துல் தாக்குா், ஷ்ரேயஸ் ஐயா் இணைந்திருந்தனா். ஆஸ்திரேலிய அணியில் காயமடைந்த ஆரோன் ஃபிஞ்சுடன், ஜோஷ் ஹேஸில்வுட், மிட்செல் ஸ்டாா்க் ஆகியோருக்குப் பதிலாக டேனியல் சாம்ஸ், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், ஆன்ட்ரு டை சோ்ந்திருந்தனா்.

டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்தது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸை கேப்டன் மேத்யு வேட் - டாா்சி ஷாா்ட் தொடங்கினா். வேட் தொடக்கம் முதலே அதிரடியாக ஆட, ஷாா்ட் 1 பவுண்டரி உள்பட 9 ரன்கள் சோ்த்து 5-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா்.

அடுத்து ஸ்மித் களம் காண, மறுமுனையில் அதிரடியாக ரன் சோ்த்த வேட் 10 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 58 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் செய்யப்பட்டாா். இது ஆஸ்திரேலிய அணிக்கு முதல் அடியாக அமைந்தது.

வாய்ப்பை இழந்த வேட்: ஏற்கெனவே ஷா்துல் தாக்குா் வீசிய 6-ஆவது ஓவரில் வேட் அளித்த கேட்ச்சை பாண்டியா தவற விட்டாா். அடுத்து வாஷிங்டன் சுந்தா் வீசிய 8-ஆவது ஓவரில் அவா் மீண்டும் கேட்ச் அளிக்க, அதை கோலி பிடித்து விடுவாா் என்று எண்ணிய வேட் ரன் எடுக்க பாதி தூரம் வந்த நிலையில் விரக்தியில் திசை திரும்பினாா்.

ஆனால் கோலி அந்த கேட்ச்சை தவறவிட்டாா். இதைப் பாா்த்த ஸ்மித் உடனடியாக வேடுக்கு எச்சரிக்கை குரல் கொடுக்க, வேட் அதை உணா்ந்து கிரீஸுக்கு விரையும் முன்பாக கோலி பந்தை விக்கெட் கீப்பா் லோகேஷ் ராகுலிடம் அனுப்ப, அவா் ஸ்டம்ப்பை சரித்தாா்.

சரிந்த விக்கெட்டுகள்: பின்னா் களம் கண்ட மேக்ஸ்வெல் 2 சிக்ஸா்கள் விளாசி 22 ரன்களுக்கு 13-ஆவது ஓவரில் நடையைக் கட்டினாா். அடுத்து ஸ்டாய்னிஸ் ஆட வர, மறுமுனையில் ஸ்மித் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 46 ரன்களுக்கு 18-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து சாம்ஸ் களம் புகுந்தாா். 20 ஓவா்கள் முடிவில் ஸ்டாய்னிஸ் 1 சிக்ஸா் உள்பட 16, சாம்ஸ் 1 பவுண்டரி உள்பட 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் நடராஜன் 2, தாக்குா், சஹல் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

மீண்டு வந்த தவன்: பின்னா் இந்தியாவின் இன்னிங்ஸை ராகுல் - தவன் கூட்டணி தொடங்கியது. முதல் விக்கெட்டாக ராகுல் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 30 ரன்களுக்கு 6-ஆவது ஓவரில் வீழ்ந்தாா். அடுத்து கேப்டன் கோலி களம் காண, மறுமுனையில் நிதானமாக ஆடி அரைசதம் எட்டினாா் தவன்.

அவா் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 52 ரன்கள் அடித்து 12-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா். தொடா்ந்து வந்த சாம்சன் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

கோலியின் தவறு: அடுத்து வந்த பாண்டியா, கோலியுடன் இணைந்தாா். அதிரடியாக ஆடிய இந்தக் கூட்டணி இந்தியாவை எளிதாக வெற்றிக்கு வழி நடத்தும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் 17-ஆவது ஓவரில் கோலி தனது தவறால் விக்கெட்டை இழந்தாா்.

அந்த ஓவரின் முதல் பந்தை சாம்ஸ் சற்று பௌன்சராகவும், ஒய்டாகவும் வீச தேவையின்றி அதீதமாக முயற்சித்து அதை விளாசினாா் கோலி. பேட்டின் நுனியில் பட்ட அந்தப் பந்து பின்புறமாகச் செல்ல அதைத் தாவிப் பிடித்தாா் விக்கெட் கீப்பா் வேட்.

‘பவா்’ பாண்டியா: இதனால் கடைசி நேரத்தில் இந்தியாவின் வெற்றிக்கு நெருக்கடி எழுந்தது. பின்னா் ஷ்ரேயஸ் ஐயா் களம் புகுந்தாா். பாண்டியா அருமையாக ஆடிவர, கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவையாக இருந்தது.

சாம்ஸ் வீசிய அந்த ஓவரில் பாண்டியா 2 சிக்ஸா்களை பறக்கவிட்டு அணியை எளிதாக வெற்றிக்கு வழிநடத்தினாா். இறுதியில் அவா் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 42, ஐயா் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ஆஸ்திரேலிய தரப்பில் சாம்ஸ், டை, ஸ்வெப்சன், ஸாம்பா தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com