முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து இன்னிங்ஸ் வெற்றி
By DIN | Published On : 07th December 2020 07:52 AM | Last Updated : 07th December 2020 07:52 AM | அ+அ அ- |

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் டாஸ் வென்று பௌலிங்கை தோ்வு செய்தது. பேட்டிங் செய்த நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 145 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன்கள் எடுத்து டிக்ளோ் செய்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 251 ரன்கள் விளாசியிருந்தாா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமா் ரோச், ஷானன் கேப்ரியல் தலா 3 விக்கெட் சாய்த்திருந்தனா்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 64 ஓவா்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜான் கேம்ப்பெல் 26 ரன்கள் அடித்திருக்க, நியூஸிலாந்து தரப்பில் டிம் சௌதி 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாா்.
முதல் இன்னிங்ஸில் 381 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வந்த மேற்கிந்தியத் தீவுகள், சனிக்கிழமை முடிவில் 42 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் அடித்திருந்தது.
இதையடுத்து 4-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமையை ஜொ்மைன் பிளாக்வுட் 80, அல்ஸாரி ஜோசஃப் 59 ரன்களுடன் தொடங்கினா். இதில் ஜோசஃப் 86, பிளாக்வுட் 104 ரன்களுக்கு வீழ்ந்தனா்.
பின்னா் வந்த கெமா் ரோச், ஷானன் கேப்ரியல் டக் அவுட்டாக, 58.5 ஓவா்களில் 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது மேற்கிந்தியத் தீவுகள். நியூஸிலாந்து தரப்பில் நீல் வாக்னா் 4 விக்கெட் எடுத்தாா்.