3-வது டி20யில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல், மேத்யூ வேட்: இந்திய அணிக்கு 187 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது.
மேத்யூ வேட்
மேத்யூ வேட்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது.

காயம் காரணமாக 2-வது டி20 ஆட்டத்தில் இடம்பெறாத ஆரோன் ஃபிஞ்ச், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் தலைமை தாங்குகிறார். ஆஸி. அணியில் ஸ்டாய்னிஸ் இடம்பெறவில்லை. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் இல்லை. மயங்க் அகர்வால், ஷமி, பும்ரா ஆகியோருக்கு டெஸ்ட் தொடருக்காக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

2-வது ஓவரில் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச்சை டக் அவுட் ஆக்கினார் வாஷிங்டன் சுந்தர். இதன்பிறகு ஸ்மித்தும் மேத்யூ வேடும் அருமையான கூட்டணி அமைத்தார்கள். ஸ்மித் 24 பந்துகளில் சுந்தர் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அடுத்ததாக வேட் - மேக்ஸ்வெல் கூட்டணி அதிரடியாக விளையாடியது.

11-வது ஓவரில் நடராஜன் வீசிய பந்து, மேத்யூ வேட்-ன் காலில் பட்டது. இதனால் எல்பிடபிள்யூ கோரினார் நடராஜன். ஆனால் கள நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார். 

இதன்பிறகு மைதானத்தில் உள்ள பெரிய திரையில் இது காண்பிக்கப்பட்டது. அப்போது அவுட் போலத் தெரிந்ததால் உடனே டிஆர்எஸ் கோரினார் கோலி. இதை ஏற்றுக்கொண்ட நடுவரும் டிஆர்எஸ்ஸுக்கு சைகை காண்பித்தார். ஆனால் மேத்யூ வேட் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். பெரிய திரையில் காண்பித்த பிறகு முறையீடு செய்யலாமா எனக் கேட்டார். இதனால் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். டிஆர்எஸ் கிடையாது என அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கோலி, நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். எனினும் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. 

ஆனால் ரீப்ளேயில் காண்பிக்கப்பட்டபோது, மேத்யூ வேட் எல்பிடபிள்யூ ஆகியிருந்தார். இதனால் விக்கெட் எடுக்கும் வாய்ப்பைப் பறிகொடுத்தார் நடராஜன். 

53 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்து தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் வேட். கடைசி ஓவர் வரை விளையாடிய மேக்ஸ்வெல், 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து நடராஜன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். ஷார்ட் 7 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் டி20 ஆட்டத்தை 11 ரன்கள் வித்தியாசத்திலும் 2-வது டி20 ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வென்று டி20 தொடரைக் கைப்பற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com