நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியினர் பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது...
நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி

கரோனா பாதிப்பு இல்லாததால் நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியினர் பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கின்றன. நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-0 என நியூசிலாந்து வென்றுள்ளது. இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 

இதற்கு அடுத்ததாக பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் மூன்று டி20, இரு டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. டிசம்பர் 18-ல் டி20 தொடரும் டிசம்பர் 26-ல் டெஸ்ட் தொடரும் தொடங்கவுள்ளன.

லாகூரிலிருந்து நியூசிலாந்துக்குப் புறப்படுவதற்கு முன்பு பாகிஸ்தான் அணியினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா இல்லை என உறுதியானது. கரோனா அறிகுறிகள் தென்பட்ட ஃபகார் ஸமான், அணியிலிருந்து விலகினார். எனினும் நியூசிலாந்துக்கு வந்திறங்கிய பாகிஸ்தான் அணியினருக்கு முதலில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் ஆறு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த ஆறு பேரும் தனிமைப்படுத்தப்பட்டார்கள். 

நவம்பர் 24 அன்று நியூசிலாந்துக்கு வந்த பாகிஸ்தான் வீரர்கள், 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் பாகிஸ்தான் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்குப் பிறகு விதிமுறைகளை அலட்சியப்படுத்தும் வீரர், பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று கூறப்பட்டது. 

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த 54 பேருக்கும் கடந்த வாரம் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 44 பேருக்கு கரோனா இல்லை என்பது உறுதியானது. ஆறு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 4 பேர் இதற்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் பாகிஸ்தான் அணியின் தனிமைப்படுத்துதல் காலம் நீட்டிக்கப்பட்டது.

ஐந்தாவது மற்றும் கடைசிக்கட்டப் பரிசோதனையில் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஒருவர் தவிர மற்ற அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து பாகிஸ்தான் அணியினர் பயிற்சி மேற்கொள்ள நியூசிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ஒருவர் மட்டும் குணமாகும் வரை தனிமைப்படுத்தப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து குயின்ஸ்டவுனுக்குச் சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள், டிசம்பர் 18 முதல் தொடங்கவுள்ள டி20 தொடருக்காகப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com