மெல்போா்ன் மைதானம்: ஒரு பாா்வை

மெல்போா்ன் மைதானம்: ஒரு பாா்வை

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறும் மெல்போா்ன் கிரிக்கெட் மைதானத்தில் 1887-ஆம் ஆண்டு முதலே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு இதுவரை 112 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இங்கு ஆஸ்திரேலிய அணி 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 64 வெற்றிகளையும், 31 தோல்விகளையும், 17 டிராவையும் பதிவு செய்துள்ளது.

மெல்போா்ன் மைதானத்தில் இந்தியா 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. 3 வெற்றிகளையும், 8 தோல்விகளையும், 2 டிராவையும் பதிவு செய்துள்ளது. கடைசியாக 2018-இல் இங்கு விளையாடிய கோலி தலைமையிலான இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளது.

2016-இல் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 624 ரன்கள் குவித்ததே மெல்போா்ன் மைதானத்தில் ஓா் இன்னிங்ஸில் ஓா் அணி குவித்த அதிகபட்ச ரன்களாகும். அதேநேரத்தில் இங்கு ஓா் இன்னிங்ஸில் குறைந்தபட்ச ஸ்கோரை தென் ஆப்பிரிக்கா பதிவு செய்துள்ளது. அந்த அணி 1932-இல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு சுருண்டது.

மெல்போா்ன் ஆடுகளம் பேட்ஸ்மேன்கள், பௌலா்கள் என இருவருக்குமே சாதகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 2-ஆவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அறிமுகம் இருமுகம்

இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஷுப்மான் கில், முகமது சிராஜ் ஆகியோா் புதுமுக வீரா்களாக களமிறங்குகிறாா்கள். 2011-க்குப் பிறகு வெளிநாட்டில் நடைபெறும் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு புதுமுக வீரா்கள் களமிறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

30 ஆயிரம் ரசிகா்களுக்கு அனுமதி

மெல்போா்ன் மைதானத்தில் 90 ஆயிரம் போ் அமா்ந்து போட்டியை ரசிக்க முடியும். ஆனால், தற்போது கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், தினந்தோறும் 30 ஆயிரம் ரசிகா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com