மெல்போர்னில் மகத்தான வெற்றி: 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி!

முதல் இன்னிங்ஸில் சதமடித்த ரஹானே, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்...
மெல்போர்னில் மகத்தான வெற்றி: 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி!

மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை அடைந்துள்ளது.

சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் நாளிலேயே 72.3 ஓவா்களில் 195 ரன்களுக்குச் சுருண்டது. பும்ராவின் வேகத்திலும், அஸ்வினின் சுழலிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சரிந்தனா்.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரஹானே 112 ரன்களும் ஜடேஜா 57 ரன்களும் எடுத்தார்கள். 

3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 66 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. கிரீன் 17, கம்மின்ஸ் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று ஆஸி. அணி வீரர்கள் முடிந்த அளவு முயற்சி செய்து பார்த்தார்கள். எனினும் இந்திய பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் தந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். கிரீன் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.

ஆஸி. அணி தனது 2-வது இன்னிங்ஸில் 103.1 ஓவர்களில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிராஜ் 3 விக்கெட்டுகளும் அஸ்வின், ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

இந்திய அணிக்கு 70 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை 15.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு அடைந்தது இந்திய அணி. ஷுப்மன் கில் 35, ரஹானே 27 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்திய அணி வெளிநாடுகளில் பெற்ற டெஸ்ட் வெற்றிகளில் இந்த வெற்றியே மகத்தானதாகக் கருதப்படுகிறது.

முதல் இன்னிங்ஸில் சதமடித்த ரஹானே, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

3-வது டெஸ்ட், ஜனவரி 7 அன்று தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com