கேரள அணியில் மீண்டும் இடம் பிடித்தார் ஸ்ரீசாந்த்

சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கேரள அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இடம்பிடித்துள்ளார்.
கேரள அணியில் மீண்டும் இடம் பிடித்தார் ஸ்ரீசாந்த்

சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கேரள அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இடம்பிடித்துள்ளார்.

கரோனா சூழல் காரணமாக உள்நாட்டு போட்டிகள் தாமதமான நிலையில், அதில் முதலாவதாக சையது முஷ்டாக் அலி டி20 போட்டியை வரும் ஜனவரி 10 முதல் 31-ஆம் தேதி வரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் ஆட்டங்களில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பிசிசிஐ, ஸ்ரீசாந்த் மற்றும் அவரது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சக வீரர்கள் அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருக்கு ஆயுள் தடை விதித்தது. இதை எதிர்த்து கேரள மற்றும் உச்ச நீதிமன்றங்களில் ஸ்ரீசாந்த் முறையிட்டார். பிசிசிஐ ஒழுங்குமுறை குழுவின் ஆணையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்ரீசாந்த் தண்டனைக் காலம் குறித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. 

இதையடுத்து பிசிசிஐ மத்தியஸ்தர் நீதிபதி டிகே.ஜெயின் (ஓய்வு) இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டார். இதில் ஸ்ரீசாந்தின் ஆயுள் தடையை குறைக்க முடிவு செய்து உத்தரவிட்டார். இதன்படி 13.9.2013 முதல் 7 ஆண்டுகள் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் ஆட தடை விதித்தார். அதன் பின் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்வை ஸ்ரீசாந்த் தொடரலாம். அவரது கிரிக்கெட் ஆடும் காலம் ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில், அவரது தடைக்காலத்தை குறைப்பதே நீதியாக இருக்கும் என ஜெயின் தனது உத்தரவில் குறிப்பிட்டார். 

ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இதனால் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது.

கேரளத்தில் அந்த மாநில கிரிக்கெட் சங்கத்தால் முதல் முறையாக கேசிஏ பிரசிடென்ட்ஸ் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி டிசம்பர் 17 முதல் நடத்தப்பட இருந்தது. அதில் கேசிஏ டைகா்ஸ் என்ற அணிக்காக விளையாட ஸ்ரீசாந்த் தோ்வு செய்யப்பட்டார். எனினும் கேரளாவில் நிலவும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக அப்போட்டி தற்போது ஒத்திவைக்கப்பட்டது.

உள்நாட்டு கிரிக்கெட்டில், சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி வரும் ஜனவரி 10-ஆம் தேதி தொடங்கி, 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்காக வீரா்களுக்கான கரோனா பாதுகாப்பு வளையம் அமைக்கப்படவுள்ளது. கரோனா சூழலில் உள்நாட்டு போட்டிகளை நடத்துவது தாமதமாகிவிட்ட நிலையில், அவற்றில் முதலாவதாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. ரஞ்சி கோப்பை, விஜய் ஹஸாரே கோப்பை போட்டிகளை நடத்துவது தொடா்பான முடிவு, சையது முஷ்டாக் அலி போட்டியின் குரூப் சுற்று நிறைவுபெறும் தருணத்தில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

சையது முஷ்டாக் அலி டி20 போட்டிக்கான கேரள அணியில் 37 வயது ஸ்ரீசாந்த் பெயர் இடம்பெற்றுள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரள அணியில் ராபின் உத்தப்பா, ஜலஜ் சக்சேனா போன்றோரும் இடம்பெற்றுள்ளார்கள். அணி அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த சிறிய நிகழ்ச்சியில் ஸ்ரீசாந்துக்குக் கேரள தொப்பி அணிவிக்கப்பட்டது. இதன் விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த அறிவிப்பினால் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பிசிசிஐ நடத்தும் போட்டி ஒன்றில் ஸ்ரீசாந்த் விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com