ரோஹித்துக்கான இடம் எது?: வெளியேறுவது அகர்வாலா? விஹாரியா?
By DIN | Published On : 31st December 2020 04:26 AM | Last Updated : 31st December 2020 04:26 AM | அ+அ அ- |

புது தில்லி: காயத்திலிருந்து மீண்டு அணியில் இணைந்துள்ள ரோஹித் சர்மாவுக்கு, சிட்னி டெஸ்டில் பேட்டிங் வரிசையில் எந்த இடம் வழங்கப்படும் என்ற முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. அவருக்காக மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வளிக்கப்படும் எனத் தெரிகிறது.
கோலி இல்லாத நிலையில், ரஹானே தலைமையிலான இந்திய அணி திறம்பட விளையாடி மெல்போர்ன் டெஸ்டை கைப்பற்றியது. 5 பெளலர்களுடன் களமிறங்கும் அந்த முடிவுக்கு நல்ல பலன் கிடைத்த நிலையில், தற்போது பேட்டிங்கில் கடினமான முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியின்போது காயமடைந்த ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் வாய்ப்பை இழந்ததுடன், முதல் இரு டெஸ்டுகளிலும் விளையாடவில்லை. இந்நிலையில், காயத்திலிருந்து மீண்டு ஆஸ்திரேலியா வந்தடைந்த ரோஹித், மெல்போர்னில் இந்திய அணியினருடன் புதன்கிழமை இணைந்தார். தற்போது பேட்டிங் வரிசையில் அவருக்கான இடம் குறித்த விவாதம் எழுந்துள்ளது.
அவர் ஆஸ்திரேலியா வந்தடைந்து தனிமைப்படுத்தப்பட்ட சூழல், உரிய பயிற்சி இல்லாதது போன்ற காரணங்களால் அவருக்கு தொடக்க வீரராக வாய்ப்பளிக்கப்படாது எனத் தெரிகிறது.
இளம் வீரரான ஷுப்மன் கில், மெல்போர்ன் டெஸ்டில் வெளிப்படுத்திய முதிரிச்சியான ஆட்டத்தால் சிட்னி டெஸ்டிலும் தனது வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.
இதனால் டாப் ஆர்டரில் இருக்கும் மயங்க் அகர்வால், மிடில் ஆர்டரில் இருக்கும் ஹனுமா விஹாரி ஆகியோரில் ஒருவரின் இடம் ரோஹித்துக்கு வழங்கப்படலாம் எனத் தெரிவதாக இந்திய அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறினார்.
மறுபுறம், அகர்வால், விஹாரி இருவருக்கும் ஓய்வளித்து, ரோஹித் சர்மாவுடன் லோகேஷ் ராகுலையும் அணியில் சேர்த்து, அவரை ஷுப்மன் கில்லுடன் தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று மற்றொரு முன்னாள் தலைமை தேர்வாளரான திலிப் வெங்சர்கார் கூறியுள்ளார்.
எனினும், ரோஹித்துக்கான இடம் குறித்து அவரிடம் பேசி வருவதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.