ஒரே ஓவரில் 34 ரன்கள்: துபேவை துவம்சம் செய்த நியூஸி. பேட்ஸ்மேன்கள்

இந்தியாவுடனான கடைசி டி20 ஆட்டத்தில் ஷிவம் துபே வீசிய ஒரு ஓவரில் நியூஸிலாந்து அணி 34 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது.
ஒரே ஓவரில் 34 ரன்கள்: துபேவை துவம்சம் செய்த நியூஸி. பேட்ஸ்மேன்கள்

இந்தியாவுடனான கடைசி டி20 ஆட்டத்தில் ஷிவம் துபே வீசிய ஒரு ஓவரில் நியூஸிலாந்து அணி 34 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது.  

நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது.

164 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்கம் படுமோசமாக அமைந்தது. முதல் விக்கெட்டாக கப்தில் வெறும் 2 ரன்களுக்கு பூம்ரா வேகத்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து  அதிரடி காட்டிய கோலின் முன்ரோ 6 பந்துகளில் 15 ரன்கள்  எடுத்து வாஷிங்டன் சுந்தர் ஓவரில் போல்டானார். அடுத்து களமிறங்கிய டாம் புரூஸும் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி 17 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து, சைஃப்ர்ட்டுடன் ராஸ் டெய்லர் இணைந்தார். இந்த இணை தொடக்கத்தில் விக்கெட்டைப் பாதுகாத்து விளையாடியது. இதன்பிறகு, ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கில் இருவரும் அதிரடிக்கு மாற முயற்சித்தனர். 

இந்த சூழலில் இந்திய அணி ஷிவம் துபேவை பந்துவீச அழைத்தது. இவருடைய ஓவருக்கு முன் நியூஸிலாந்து அணி 9 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், 10-வது ஓவரை வீசுகிறார் துபே. முதல் பந்திலேயே சைஃபர்ட் கிரீஸைவிட்டு வெளியே வந்து அட்டகாசமாக ஒரு சிக்ஸர் அடித்தார். தொடர்ந்து அடுத்த பந்தில் புல் ஷாட் மூலம் ஃபிளாட்டாக சிக்ஸர் அடித்தார். வாஷிங்டன் சுந்தர் பவுண்டரி எல்லையில் இருந்திருந்தால் இந்த பந்தை அவர் பிடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், அவர் சற்று முன் நின்றிருந்தார்.

3-வது பந்தை கிரீஸை பயன்படுத்தி ஃபைன் லெக் திசையில் பவுண்டரி அடித்தார் சைஃபர்ட். இந்த முதல் 3 பந்துகளிலேயே துபே அழுத்தத்தை உணரத் தொடங்கினார். 4-வது பந்தில் சைஃபர்ட் ஒரு ரன் எடுக்க, ராஸ் டெய்லர் ஸ்டிரைக்குக்கு வந்தார். 

5-வது பந்தை ராஸ் டெய்லர் பவுண்டரிக்கு விரட்ட, நடுவர் இதை நோ-பால் என அறிவித்தார். இதனால், கூடுதலாக ஒரு பந்து மற்றும் ஃப்ரீ ஹிட்டும் கிடைத்தது. ஏற்கெனவே இந்த ஓவரை வெளுத்து வாங்கிய நிலையில், ஃப்ரீ ஹிட் பந்தையும் டெய்லர் அட்டகாசமாக சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். இதே வேகத்தில் கடைசி பந்தையும் டெய்லர் அவருக்கு நெருக்கமான லெக் சைட் திசையில் சிக்ஸருக்கு விரட்டினார்.

எனவே, இந்த ஓவரில் மட்டும் நியூஸிலாந்து அணிக்கு 34 ரன்கள் கிடைத்தது. இந்த ஓவருக்குப் பிறகு நியூஸிலாந்து அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை எட்டி வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை எளிதாக்கியது.

ஒரே ஓவரில் இப்படி 34 ரன்கள் வாரி வழங்கியதையடுத்து ஷிவம் துபே தற்போது டிவிட்டரில் டிரெண்டாகத் தொடங்கிவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com