யு-19 உலகக்கோப்பை: முதன்முறையாக கோப்பை வென்றது வங்கதேசம்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி கோப்பை வென்றது.
புகைப்படம்: டிவிட்டர் | கிரிக்கெட் உலகக்கோப்பை
புகைப்படம்: டிவிட்டர் | கிரிக்கெட் உலகக்கோப்பை


19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி கோப்பை வென்றது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு பேட்ஸ்மேன்கள் கைகொடுக்கவில்லை. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மட்டும் இந்த ஆட்டத்திலும் அசத்தினார். அவர் 121 பந்துகளை எதிர்கொண்டு 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்தபடியாக திலக் வர்மா மட்டும் ஓரளவு ஒத்துழைப்பு தந்து 38 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்ப இந்திய அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்கம் நன்றாக அமைந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 50 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, பந்துவீச்சில் ரவி பிஷ்னாய் இந்திய அணிக்கு நம்பிக்கையளித்தார். முதல் விக்கெட்டோடு நிறுத்தாமல் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வங்கதேச அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பெவிலியனக்கு நடையைக் கட்டினர். இதன் காரணமாக வங்கதேச அணி 85 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழக்க இந்திய அணிக்கு அது ஊக்கம் அளித்தது.

இருப்பினும், காயம் காரணமாக ரிடயர்ட் ஹர்ட் ஆன தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹோசைன் எமோன், மீண்டும் களமிறங்கி கேப்டன் அக்பர் அலியுடன் இணைந்தார். இந்த இணை ஆட்டத்தை மீண்டும் வங்கதேசம் நோக்கி திருப்பியது. இதனால், வங்கதேச அணியின் வெற்றி இலக்கு குறைந்துக்கொண்டே இருந்தது.

இந்நிலையில், வங்கதேச அணி மணிக்கட்டு சுழலில் திணறுவதை உணர்ந்த இந்தியக் கேப்டன், ஜெய்ஸ்வாலைப் பந்துவீச அழைத்தார். இதற்குப் பலன் அளிக்கும் வகையில் தொடக்க ஆட்டக்காரர் எமோன் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இருப்பினும், கேப்டன் அக்பர் அலி பொறுப்புடன் விளையாடி நிதானம் காட்டினார். 

இந்நிலையில், மோசமான வானிலை காரணமாகவும், மழை காரணமாகவும் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது வங்கதேச அணியின் வெற்றி இலக்கு 46 ஓவர்களில் 170 ரன்களாக மாற்றப்பட்டது. 

ஆனால், இடைவேளைக்குப் பிறகு 2-வது ஓவரிலேயே வங்கதேச அணி வெற்றி இலக்கை அடைந்தது. 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதன்முதலாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வங்கதேச கேப்டன் அக்பர் அலி 43 ரன்கள் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com