பாகிஸ்தானில் உள்ள இந்திய அணி அதிகாரப்பூர்வ இந்திய அணி அல்ல: உலக கபடி கூட்டமைப்பு

உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் சென்றடைந்துள்ள இந்திய அணி அதிகாரப்பூர்வ இந்திய அணி அல்ல என்று உலக கபடி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
புகைப்படம்: டிவிட்டர்
புகைப்படம்: டிவிட்டர்


உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் சென்றடைந்துள்ள இந்திய அணி அதிகாரப்பூர்வ இந்திய அணி அல்ல என்று உலக கபடி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி  கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானில் உள்ள லாகூர் சென்றடைந்தது. ஆனால், பாகிஸ்தான் செல்வதற்கு இந்தியத் தரப்பில் இருந்து இதற்கு உரிய அனுமதியளிக்கவில்லை என்று செய்திகள் வெளியானதையடுத்து, இது சர்ச்சைக்குள்ளானது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரிந்தர் பாத்ரா ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "கடந்த சனிக்கிழமை லாகூர் சென்றடைந்த இந்திய அணி, இங்கிருந்து அதிகாரப்பூர்வமாகச் சென்ற இந்திய அணி கிடையாது. இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பால் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. எனவே, அவர்களால் இந்தியா என்ற சொல்லைப் பயன்படுத்த முடியாது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி வழங்கவில்லை, கபடி கூட்டமைப்பாலும் அனுமதி வழங்கப்படவில்லை. அதனால், யார் சென்றார்கள் என்பது தெரியவில்லை. 60 பேர் சென்றுள்ளார்களா, 100 பேர் சென்றுள்ளார்களா என்பது எதுவும் எனக்குத் தெரியாது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினரான கபடி கூட்டமைப்பும், யாரையும் அனுப்பவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சகத்திடம் இருந்து வெளிவரும் அறிக்கைகளையும் பார்த்தேன். அவர்களும் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே, அவர்கள் யாரென்று எதுவுமே தெரியாது. இந்திய விளையாட்டுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.

எங்கள் உறுப்பினர் தரப்பில் அனுமதி வழங்காததால் அவர்கள் இந்தியா என்ற சொல்லைப் பயன்படுத்த முடியாது. இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் அரசின் வழியாக வந்தால் மட்டுமே அவர்கள் இந்தியா என்ற சொல்லைப் பயன்படுத்த முடியும். இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு சில தனிநபர்கள் இந்தியா என்று கூறி விளையாடலாம். ஆனால், விளையாட்டுகள் அப்படி நடைபெறாது. 

ஆனால், பாகிஸ்தான் குறித்து என்னால் ஒருபோதும் கணிக்க முடியாது. அது எனது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது" என்றார்.

இந்நிலையில், உலக கபடி கூட்டமைப்பின் தலைவர் டோர்ஜி லாமா ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,

"இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அறிக்கை உண்மைதான். லாகூரில் உள்ள இந்திய அணி அதிகாரப்பூர்வ இந்திய அணி அல்ல. விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அனுமதி பெறாத எந்தவொரு அணியும் இந்தியா என்ற சொல்லை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த முடியாது" என்றார்.

உலகக்கோப்பை கபடி போட்டியை பாகிஸ்தான் முதன்முதலாக நடத்துகிறது. இந்த ஆட்டம் இன்று (திங்கள்கிழமை) லாகூரில் உள்ள பஞ்சாப் கால்பந்து மைதானத்தில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, ஃபைசலாபாத் மற்றும் குஜ்ராத்திலும் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்பதற்காக வாகா எல்லை வழியே இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படும் இந்த அணி கடந்த சனிக்கிழமை லாகூரைச் சென்றடைந்துள்ளது. போட்டி ஏற்பாட்டாளர்களின்படி பாகிஸ்தான், இந்தியா, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஈரான், கென்யா, சையர் லியோன் மற்றும் அசெர்பைஜான் என மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்கின்றன. இதில் மொத்தம் 24 போட்டிகள் நடைபெறவுள்ளன.

முறைப்படி இந்தியா என்ற பெயரில் வெளிநாடுகளில் நிகழும் ஒரு போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் சில நடைமுறைகளும், விதிமுறைகளும் உள்ளன. முதலில் தேசிய கூட்டமைப்பு விளையாட்டுத் துறை அமைச்சகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து, அரசியல் ரீதியான ஒப்புதலைப் பெற வெளியுறவுத் துறை அமைச்சகத்தையும், பாதுகாப்பு காரணங்கள் கருதி அதற்கான ஒப்புதலைப் பெற உள்துறை அமைச்சகத்தையும் தொடர்பு கொள்ள வேண்டும். அரசாங்கம் நிதியுதவி வழங்கினாலும், வழங்காவிட்டாலும் இதுதான் முறையான நடைமுறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com