16 வயதில் ஹாட்ரிக் எடுத்த நசீம் ஷா: வங்கதேசத்தை வென்று பாகிஸ்தான் அபாரம்

வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16 வயதில் ஹாட்ரிக் எடுத்த நசீம் ஷா: வங்கதேசத்தை வென்று பாகிஸ்தான் அபாரம்


வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது மிதுன் 63, நஜ்மல் ஹுசேன் 44 ரன்களைச் சேர்த்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 122.5 ஓவா்களில் 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பாபர் ஆஸம் 143 ரன்களையும், தொடக்க வீரர் ஷான் மசூத் 100 ரன்களையும் குவித்தனர். ஹாரிஸ் சோஹைல் 75, ஆஸாத் ஷபிக் 65 ரன்களை விளாசினர். வங்கதேச தரப்பில் அபு ஜாயேத், ரூபேல் ஹூசேன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டைஜுல் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதையடுத்து, 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்திருந்தது. பாகிஸ்தான் தரப்பில் 16 வயதே ஆன இளம் நசீம் ஷா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தார்.

இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) 4-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே மொமினுல் ஹக் 37 ரன்களுக்கு ஷஹீன் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, வங்கதேச அணிக்கு பெரிதளவில் பாட்னர்ஷிப் அமையவில்லை. லிட்டன் தாஸ் மட்டும் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெயிலண்டர்கள் ஒற்றை இலக்கு ரன்களுக்கு ஆட்டமிழக்க வங்கதேச அணி 168 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம், பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பாகிஸ்தான் அணித் தரப்பில் நசீம் ஷா மற்றும் யாசீர் ஷா ஆகியோர் 2-வது இன்னிங்ஸ் பந்துவீச்சில் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதை நசீம் ஷா வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com