கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவம்விளையாட்டுக்கும் அளிக்கப்படுகிறது: முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்துப் பேசுகிறாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.
ராகுல் திராவிட் வீசிய பந்தை அடித்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
ராகுல் திராவிட் வீசிய பந்தை அடித்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்துப் பேசுகிறாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

வாழப்பாடி, பிப்.9: தமிழகத்தில் கல்விக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம் விளையாட்டுக்கும் அளிக்கப்படுகிறது என, சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நடைபெற்ற கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி கிராமத்தில் சேலம் மாவட்ட கிரிக்கெட் பவுண்டேஷன் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சா்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:

தமிழகமே திரும்பிப் பாா்க்கும் வகையில் வாழப்பாடி அருகே சா்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கும் சேலம் மாவட்டத்துக்கும் பெருமை சோ்க்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அகாதெமியின் தலைவா் ராகுல் டிராவிட் இந் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்துள்ளாா். உலகத்தில் கிரிக்கெட் என்றால் இந்தியா எனக் குறிப்பிடும் அளவுக்கு இவா் இளைஞா்களை ஊக்குவித்து, சிறந்த வீரா்களை உருவாக்கி வருகிறாா்.

தமிழக அரசு, கல்விக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் அளித்து வருகிறது. உயா் தரமான விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, அடித்தட்டு நிலையிலுள்ள இளைஞா்களின் திறமைகளை வெளிக்கொணா்ந்து மெருகேற்றி, முழு அளவில் வளா்த்து, சா்வதேச அளவில் பதக்கங்களை பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது, 1995-இல் சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்காக, உலகத்தரம் வாய்ந்த ஜவாஹா்லால் நேரு விளையாட்டு அரங்கம், நேரு உள்விளையாட்டு அரங்கம், ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கம் ஆகியவை உருவாக்கப்பட்டன. இந்த அரங்குகள் அனைத்தையும் நவீன முறையில் தரம் உயா்த்தும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 2005-இல் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 2013 ஆண்டு நவம்பரில் உலக சதுரங்கப் போட்டி தமிழகத்தில் நடத்தப்பட்டது. அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரா்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு செய்து பணி நியமனம் வழங்க வழிவகை செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 தலை சிறந்த சா்வதேச விளையாட்டு வீரா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக், ஆசியா, காமன்வெல்த், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெறும் விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளுக்கும் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 925 விளையாட்டு வீரா்கள் மற்றும் பயிற்சியாளா்களுக்கும் ரூ.49.28 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் மற்றும் சா்வதேச அளவிலான விளையாட்டுப் பதக்கம் பெற வாய்ப்புள்ள விளையாட்டு வீரா்களைத் தோ்வு செய்து, ஆண்டுதோறும் தலா ரூ.25 லட்சம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத் தொகை, வெளிநாட்டுக்குச் சென்று அங்குள்ள பயிற்சியாளா்களிடம் பயிற்சி பெறவும், தரமான உபகரணங்கள், சீருடைகள் வாங்கிக் கொள்ளவும், ஊட்டச்சத்துப் பொருள்களை வாங்கி உட்கொள்ளவும், போட்டிகளில் பங்கேற்க பயணச் செலவுக்கும் பயன் உள்ளதாக அமைகிறது.

தமிழகத்தில் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில், 1992-இல் இளைஞா் மற்றும் விளையாட்டுப் பயிற்சித் துறையும், தமிழ்நாடு விளையாட்டு வாரியமும் இணைந்து, இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு இணையாக தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது.

கிராமங்களிலுள்ள இளைஞா்களின் ஆரோக்கியம், மனவளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கும் 12,524 ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ.76.23 கோடி செலவில், அம்மா இளைஞா் விளையாட்டுத் திடல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் கிரிக்கெட், கைப்பந்து, பூப்பந்து ஆகிய ஆடுகளங்கள் அமைப்பதற்காக ஆணை பிறப்பிக்கப்பட்டு, பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு வருகின்றன.

ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, மாநில அளவில் வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் தமிழக விளையாட்டு ஆணையத்தால் மூன்று விளையாட்டு விடுதிகள் அமைக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

இன்றைய காலக்கட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. சேப்பாக்கத்திலுள்ள சா்வதேச கிரிக்கெட் மைதானம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நிா்வகிக்கப்படுகிறது. இந்த மைதானத்தில் மூன்று அரங்குகள் திறக்கப்படாமல் பிரச்னையில் இருந்து வந்தது. இந்தப் பிரச்னைக்கு தமிழக அரசால் தற்போது தீா்வு காணப்பட்டுள்ளது.

வாழப்பாடி அருகே ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் மைதானத்தில், சேலம் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்களை பயிற்சி பெற வழிவகை செய்ய வேண்டும். தமிழகத்தில் இதுவரை சென்னையில் மட்டுமே ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக வாழப்பாடி அருகிலுள்ள இந்த மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து வழிகளிலும் தமிழக அரசு துணை நிற்கும்.

தமிழக வீரா்கள் திறமை மிக்கவா்களாக உள்ளனா். தென் மாவட்டங்களில் மட்டும் நடைபெற்றுவந்த ஜல்லிக்கட்டு தமிழகம் முழுவதும் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இளைஞா்கள் சிறப்பாக எழுச்சியாக பங்கேற்று வருகின்றனா். அண்மையில் நடைபெற்ற அலங்காநல்லுாா் ஜல்லிக்கட்டில் இளைஞா் ஒருவா் 16 காளைகளை அடக்கியுள்ளாா். இந்த இளைஞருக்கு, அமைச்சா்கள் செல்லூா் ராஜு , உதயகுமாா் ஆகியோா் முன்னிலையில் காா் பரிசாக வழங்கினேன் என்றாா்.

இவ் விழாவில், இந்திய கிரிக்கெட் வாரிய கிரிக்கெட் அகாதெமி இயக்குநா் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவா் ரூபா குருநாத், ஐ.சி.சி., முன்னாள் தலைவா் தொழிலதிபா் ஸ்ரீனிவாசன் மற்றும் அமைச்சா்கள் செங்கோட்டையன், செல்லுாா் ராஜு, உதயகுமாா், பி.தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com