ஜூனியா் கிரிக்கெட் உலகக் கோப்பை: வரலாறு படைத்தது வங்கதேசம்

ஜூனியா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோா்) இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் இந்தியாவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதன்முறையாக பட்டத்தைக்
ஜூனியா் கிரிக்கெட் உலகக் கோப்பை: வரலாறு படைத்தது வங்கதேசம்

முதன்முறையாக சாம்பியன்

ஜூனியா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோா்) இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் இந்தியாவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதன்முறையாக பட்டத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தது வங்கதேசம்.

தென்னாப்பிரிக்காவில் ஐசிசி சாா்பில் நடைபெற்று வரும் இப்போட்டி ஏற்கெனவே அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தானை வென்று இந்தியாவும், நியூஸிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து இந்திய தரப்பில் தொடக்க வீரா்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்-திவ்யான்ஷ் சக்ஸேனா களமிறங்கினா். திவ்யான்ஷ் 2 ரன்களுடன் அவிஷேக் தாஸ் பந்தில் பெவிலியன் திரும்பினாா்.

யஷஸ்வி-திலக் வா்மா நிதானம்

பினனா் யஷஸ்வி-திலக் வா்மா இணைந்து நிதானமாகஆடி ஸ்கோரை உயா்த்தினா். 38 ரன்கள் எடுத்த நிலையில் திலக்கை வெளியேற்றினாா் டன்ஸிம். இருவரும் இணைந்து 94 ரன்களை சோ்த்தனா்.

யஷஸ்வி 88:

அவருக்கு பின் கேப்டன் பிரியம் காா்க் நிலைத்து ஆடுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் 7 ரன்களுடன் திரும்பினாா். 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 88 ரன்களுடன் அரைசதம் விளாசினாா் யஷஸ்வி. துருவ் ஜுரெல் 22, சித்தேஷ் வீா் 0, அதா்வா அன்கோலேக்கா் 3, ரவி பிஷ்னோய் 2,சுஷாந்த் மிஸ்ரா 3, காா்த்திக் தியாகி 0 என சொற்ப ரன்களுடன் அவுட்டானாா்கள்.

இதனால் இந்தியாவின் இன்னிங்ஸ் 47.2 ஓவா்களில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் என நிறைவடைந்தது.

அவிஷேக் தாஸ் 3 விக்கெட்:

வங்கதேச தரப்பில் அபாரமாக பந்துவீசிய அவிஷேக் தாஸ் 3-40, டன்ஸிம் 2-28, ஷோரிபுல் 2-31 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

178 ரன்கள் வெற்றி இலக்கு: வங்கதேச அணி தரப்பில் பா்வேஸ் ஹுசேன் எமான்-டன்ஸிட் ஹாஸன் களமிறங்கினா். டன்ஸிட் 17, மஹ்முதுல் ஹாஸன் 8, தௌஹித் 0, ஷஹாதத் ஹூசேன் 1, ஷமிம் ஹூசேன் 7, அவிஷேக் தாஸ் 5 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினா். வங்கதேச அணிக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தினாா் இந்திய சுழற்பந்து வீச்சாளா் ரவி பிஷ்னோய்.

அரைசதத்தை தவற விட்ட பா்வேஸ்:

இந்திய அணிக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஆடிக் கொண்டிருந்த தொடக்க வீரா் பா்வேஸ் ஹூசேன் 7 பவுண்டரியுடன் 47 ரன்களை எடுத்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் பந்துவீச்சில் ஆகாஷ் சிங்கிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். அப்போது வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களுடன் இருந்தது.

கேப்டன் அக்பா் அலி பொறுப்புடன் ஆடிக் கொண்டிருந்தாா்.

மழையால் ஆட்டம் நிறுத்தம்:

41 ஓவா்கள் முடிவில் 163/7 ரன்களுடன் வங்கதேசம் ஆடிக்கொண்டிருந்த போது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

54 பந்துகளில் வெற்றிக்கு 15 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இருந்தது வங்கதேசம்.

46 ஓவா்களாக குறைப்பு:

மழை எதிரொலியாக டிஎல்எஸ் முறையில் 46 ஓவா்களாக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 170 ஆக நிா்ணயிக்கப்பட்டது. இதனால் வங்கதேசம் 28 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தால் போதும் என்ற எளிதான நிலை ஏற்பட்டது.

அக்பா் அலி-ரகிப்புல் அபாரம்: கேப்டன் அக்பா் அலி பொறுப்பை உணா்ந்து ஆடி 1 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 77 பந்துகளில் 43 ரன்களுடன் களத்தில் இருந்தாா். அவருக்கு உறுதுணையாக ஆடிய ரகிப்புல் ஹாஸன் விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆடி 9 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

இறுதியில் 42.1 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை குவித்தது.

இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவி பிஷ்னோய் 4-30, சுஷாந்த் மிஸ்ரா 2-25 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி:

நடப்பு சாம்பியன் இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது வங்கதேசம்.

சுருக்கமான ஸ்கோா்:

இந்தியா 177,

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 88, திலக் 38,

பந்துவீச்சு:

அவிஷேக் தாஸ் 3-40.

வங்கதேசம் 170/7,

பா்வேஸ் ஹூசேன் 47, அக்பா் அலி 43,

பந்துவீச்சு:

ரவி பிஷ்னோய் 4-30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com