பாகிஸ்தான் விரைந்த இந்திய அணி: அனுமதி பெறாமல் சென்றதால் சர்ச்சை!

கபடி உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் பாகிஸ்தான் சென்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான் விரைந்த இந்திய அணி: அனுமதி பெறாமல் சென்றதால் சர்ச்சை!


கபடி உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் பாகிஸ்தான் சென்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உலகக்கோப்பை கபடி போட்டியை முதன்முதலாக பாகிஸ்தான் நடத்துகிறது. இந்த ஆட்டம் இன்று (திங்கள்கிழமை) லாகூரில் உள்ள பஞ்சாப் கால்பந்து மைதானத்தில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, ஃபைசலாபாத் மற்றும் குஜ்ராத்திலும் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், இந்த உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. ஆனால், பாகிஸ்தான் செல்வது குறித்து விளையாட்டுத் துறை அமைச்சகத்திடம் இருந்து எந்தவொரு முன் அனுமதியும் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கையில்,

"சர்வதேச போட்டிகளில் நாட்டின் சார்பாக பங்கேற்கும்போது விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி அவசியம். ஆனால், இரண்டு அமைச்சகங்களும்  எந்தவொரு அணிக்கும் அனுமதி வழங்கவில்லை" என்றனர்.

இந்திய அமெச்சூர் கபடி சம்மேளனம் தரப்பில், "எந்தவொரு அணிக்கும் இதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக இது சர்ச்சையாகி வருகிறது.

உலகக்கோப்பை கபடி போட்டிகளில் பங்கேற்பதற்காக வாகா எல்லை வழியாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சென்றடைந்துள்ளனர். அங்கு அந்நாட்டு கபடி கூட்டமைப்பு அலுவலர்கள், இந்திய வீரர்களுக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, லாகூரில் உள்ள விடுதிக்கு பாதுகாப்பு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஈரான், கென்யா, கனடா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்பதாக போட்டியை நடத்துபவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் 6 முறை கபடி உலகக்கோப்பை நடைபெற்றுள்ளது. 2010 முதல் 2019 வரை நடைபெற்ற 6 முறையும் இந்திய அணியே கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது. இதில் 2010, 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி பாகிஸ்தானை வென்று உலகக்கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com