இந்திய அணி ஹாட்ரிக் தோல்வி: 3-0 என தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்திலும் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது.
இந்திய அணி ஹாட்ரிக் தோல்வி: 3-0 என தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து


இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்திலும் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது.

நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் பே ஓவல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் சதம் அடித்து 112 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணிக்கு மார்டின் கப்தில் மற்றும் ஹென்ரி நிகோல்ஸ் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். கப்தில் சிக்ஸரும் பவுண்டரியுமாக விரட்டி அதிரடி காட்ட, மறுமுனையில் நிகோல்ஸ் நிதானம் காட்டினார். ஷர்துல் தாக்கூர் பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்ட கப்தில் தனது 29-வது பந்திலேயே அரைசதத்தை எட்டினார். இதன் காரணமாக அந்த அணி 15-வது ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியது.

இந்நிலையில், சாஹல் இந்திய அணிக்கு ஒரு மாற்றத்தைத் தந்தார். 17-வது ஓவரை வீசிய அவர் கப்திலை போல்டாக்கி அசத்தினார். கப்தில் 46 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 66 ரன்கள் எடுத்தார். அடுத்து நிகோல்ஸுடன் கேப்டன் வில்லியம்ஸன் இணைந்தார். 

இதுவரை நிதானம் காட்டி வந்த நிகோல்ஸ் சற்று துரிதமாக ரன் குவிக்கத் தொடங்கினார். இதன்மூலம், அவரும் அரைசத்தை எட்டினார். இந்த இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 50 ரன்களைக் கடந்து ஓரளவு நல்ல பாட்னர்ஷிப்பை அமைக்கத் தொடங்கிய நேரத்தில் சாஹல் மீண்டும் திருப்புமுனை ஏற்படுத்தினார். நியூஸிலாந்தின் முக்கியமான விக்கெட்டான வில்லியம்ஸன் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். வில்லியம்ஸன் 22 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, நியூஸிலாந்துக்கு பெரிய பாட்னர்ஷிப் அமையவில்லை. சீரான இடைவெளியில் ராஸ் டெய்லர் (12), நிகோல்ஸ் (80) மற்றும் ஜம்மி நீஷம் (19) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், நியூஸிலாந்து பக்கம் சற்று நெருக்கடி அதிகரித்தது.

ஆனால், டாம் லாத்தமுடன் இணைந்த டி கிராண்ட்ஹோம் ஆட்டத்தின் போக்கினையே மாற்றினார். இந்தியப் பந்துவீச்சை துவம்சம் செய்த டி கிராண்ட்ஹோம் சிக்ஸர் மற்றும் பவுண்டரியிலேயே ரன் குவித்து வந்தார். இதைப் பயன்படுத்தி மறுமுனையில் எளிதான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டி நம்பிக்கையளித்தார். இந்த அதிரடி ஆட்டம் மூலம் அவர் 21-வது பந்திலேயே அரைசதத்தை எட்டி அசத்தினார்.

இதன்மூலம், 48-வது ஓவரின் முதல் பந்திலேயே நியூஸிலாந்து அணி வெற்றி இலக்கை அடைந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டாம் லாதம் 34 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். கிராணட்ஹோம் 28 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 58 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூஸிலாந்து அணி 3-0 என முழுமையாக வென்று அசத்தியுள்ளது. 

31 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி முழுமையாக இழப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com