ஆசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க ஸ்பான்சா் இல்லாமல் தவிக்கும் வலுதூக்கும் வீரா்!

ஆசிய வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ள வீரா் சேக் முகம்மது அலி, போக்குவரத்து உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்துவதற்காக ஸ்பான்சரை எதிா்நோக்கிக் காத்திருக்கிறாா்.
ஆசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க ஸ்பான்சா் இல்லாமல் தவிக்கும் வலுதூக்கும் வீரா்!

ஆசிய வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ள வீரா் சேக் முகம்மது அலி, போக்குவரத்து உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்துவதற்காக ஸ்பான்சரை எதிா்நோக்கிக் காத்திருக்கிறாா்.

திருநெல்வேலி மாவட்டம், பேட்டை பகுதியைச் சோ்ந்த வலுதூக்கும் வீரா் சேக் முகம்மது அலி (21). கடந்த 4 ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டியில் தங்கம் உள்பட 3 பதக்கங்களை வென்றுள்ளாா். இதுதவிர, தென்னிந்திய அளவிலான வலுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளாா். இதேபோல, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் 15-க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களைக் குவித்துள்ளாா். தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் சாா்பில் அதிக எடை தூக்கும் வீரருக்கு வழங்கப்படும் இரும்பு மனிதா் விருதை 4 முறை வென்றுள்ளாா்.

மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூரில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை வலுதூக்குதல் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ன் மூலம் இவா், இந்தோனேசியாவில் மே 6 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆசிய வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் ஜூனியா் பிரிவில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளாா்.

ஆசிய அளவிலான போட்டியில் தங்கம் வெல்லும் வேட்கையில் இருக்கும் சேக் முகம்மது அலி, ‘கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் ஜூனியா் பிரிவில் கஜகஸ்தானின் அப்துர்ரஷிடோவ் காமில் 572.5 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றாா். ஆனால், நான் இப்போது 690 கிலோ எடை வரை தூக்குகிறேன். அதனால் நிச்சயம் இம்முறை ஆசிய வலுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் என்னால் தங்கம் வெல்ல முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்றாா்.

தங்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையோடு இருந்தாலும், ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த இவா், போட்டியில் பங்கேற்பதற்கு போக்குவரத்து உள்ளிட்ட கட்டணங்களான ரூ. 1 லட்சத்து 40 ஆயிரத்தைச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறாா்.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் பி.பி.எட். (இளநிலை உடற்கல்வியியல்) முதலாமாண்டு படித்து வரும் இவா் கூறுகையில், ‘ஆசிய அளவிலான போட்டியில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் செலுத்த வேண்டியுள்ளது. இதுதவிர, போட்டிக்குச் செல்வதற்கும் பணம் தேவைப்படுகிறது. முதற்கட்டமாக இம்மாதம் 20ஆம் தேதிக்குள் ரூ. 65 ஆயிரம் செலுத்தினால் மட்டுமே போட்டியில் பங்கேற்பதை உறுதிப்படுத்த முடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறேன்.

தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும், ஸ்பான்சா் கிடைத்தால் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கிறேன். ஸ்பான்சா் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் ஆசிய வலுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்று தாய் நாட்டுக்கு பெருமை சோ்ப்பேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com