ஆஸ்திரேலியாவுடன் பகலிரவு டெஸ்ட்டில் விளையாடுகிறது இந்தியா

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரின்போது இந்திய அணி பெரும்பாலும் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுடன் பகலிரவு டெஸ்ட்டில் விளையாடுகிறது இந்தியா


ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரின்போது இந்திய அணி பெரும்பாலும் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி 2018-19ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது அடிலெய்ட் டெஸ்ட்டை பகலிரவு ஆட்டமாக விளையாட சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, பிசிசிஐயின் தலைவராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்ற பிறகு பகலிரவு டெஸ்ட் ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெற்றது. இதுதான் இந்திய அணி விளையாடிய முதல் பகலிரவு டெஸ்ட்.

இந்நிலையில், இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறது. இந்தப் பயணத்தின்போது காபா டெஸ்ட்டை பகலிரவு டெஸட் ஆட்டமாக விளையாட இந்தியா சம்மதம் தெரிவிக்கும் ஆஸ்திரேலியா எதிர்பார்கிறது.

இதனிடையே, ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரின்போது பேசிய இந்தியக் கேப்டன் விராட் கோலி, "பகலிரவு டெஸ்ட் சவாலுக்கு நாங்கள் தயார். அது காபா, பெர்த் என எதுவாக இருந்தாலும் சரி. எங்களுக்கு அது குறித்து கவலையில்லை. பகலிரவு டெஸ்ட் என்பது ஒவ்வொரு டெஸ்ட் தொடரின் உற்சாகமான அம்சமாக உருவெடுத்துள்ளது. எனவே, நாங்கள் பகலிரவு டெஸ்ட் ஆட்டங்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்" என்றார்.

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி பகலிரவு டெஸ்ட்டில் விளையாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக பெயர் தெரிவிக்க விரும்பாத பிசிசிஐ அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், "ஆஸ்திரேலியப் பயணத்தின்போது இந்திய அணி பெரும்பாலும் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com