ஃபார்முக்குத் திரும்பிய அகர்வால், பந்த்: டிராவில் முடிந்தது பயிற்சி ஆட்டம்

இந்தியா, நியூஸிலாந்து லெவன் அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டிராவில் முடிந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியா, நியூஸிலாந்து லெவன் அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டிராவில் முடிந்தது.

இந்தியா, நியூஸிலாந்து லெவன் அணிகளுக்கிடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 263 ரன்களுக்கும், நியூஸிலாந்து லெவன் அணி 235 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா நல்ல தொடக்கம் தந்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பிய மயங்க் அகர்வால் இதில் நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடினார். பிரித்வி ஷா அதிரடி தொடக்கம் தந்து 39 ரன்கள் சேர்த்தார்.  அடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில் மீண்டும் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கடந்த சில ஆட்டங்களாக ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்த மயங்க் அகர்வாலும், ரிஷப் பந்த்தும் துரிதமாக ரன் சேர்த்து இழந்த ஃபார்மை மீட்டெடுத்தனர். அரைசதம் அடித்த இருவரும் முறையே 81 ரன்கள் (ரிடயர்ட் அவுட்) மற்றும் 70 ரன்கள் (ஆட்டமிழப்பு) எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ரித்திமான் சாஹாவும், அஸ்வினும் நல்ல பேட்டிங்கையே வெளிப்படுத்தி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சாஹா 30 ரன்களும், அஸ்வின் 16 ரன்களும் எடுத்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது.

மயங்க் அகர்வாலும், ரிஷப் பந்த்தும் மீண்டும் ரன் குவிப்புக்குத் திரும்பியிருப்பது இந்திய அணியின் பேட்டிங்கை மேலும் பலப்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com