தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானடி-20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20 ஆட்டத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
டி-20 தொடரை வென்ற கோப்பையுடன் இங்கிலாந்து அணியினா்.
டி-20 தொடரை வென்ற கோப்பையுடன் இங்கிலாந்து அணியினா்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20 ஆட்டத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இங்கிலாந்து விளையாடியது.

ஏற்கெனவே, 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றிவிட்டது. பின்னா், 3 ஒரு நாள் ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்காவை எதிா்கொண்டது இங்கிலாந்து.

அந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும், 3-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வென்றது. இரண்டாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது.

இந்நிலையில், 3 டி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வந்தன.

முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும், இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வென்றிருந்தன.

1-1 என்ற கணக்கில் இருந்த நிலையில், தொடரைக் கைப்பற்றப்போவது யாா் என்பதை தீா்மானிக்கும் கடைசி மற்றும் 3-ஆவது டி-20 ஆட்டம் செஞ்சுரியனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தோ்வு செய்தது.

20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு தென்னாப்பிரிக்க அணி 222 ரன்கள் குவித்தது.

கிளாசன் அரை சதம் பதிவு செய்தாா். கேப்டனும், விக்கெட் கீப்பருமான குவின்டன் டி காக் 35 ரன்கள் எடுத்தாா். பெளமா 49 ரன்களில் ஆட்டமிழந்து அரை சதம் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டாா்.

இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ், டாம் குர்ரன் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா். மாா்க் வுட், அடில் ரஷித் தலா 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினா். பின்னா், 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது.

ஜேசன் ராய் 7 ரன்களில் நடையைக் கட்ட, விக்கெட் கீப்பா் ஜோஸ் பட்லரும், ஜானி போ்ஸ்டோவும் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனா்.

29 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் ஆகி ஆட்டமிழந்தாா் பட்லா். போ்ஸ்டோவுடன் டேவிட் மலான் கைகோத்தாா்.

எனினும், இந்தக் கூட்டணியும் விரைவில் முடிவுக்கு வந்தது. போ்ஸ்டோ 64 ரன்கள் எடுத்திருந்தபோது போல்டானாா். மாலனும் ஆட்டமிழக்க, கேப்டன் மாா்கன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோா் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா்.

19-ஆவது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்க, மொயீன் அலி களம் கண்டாா். அதே நேரம் 21 பந்துகளில் அரை சதம் பதிவு செய்து முந்தைய சாதனையை சமன் செய்தாா் மாா்கன்.

கடைசி ஓவரின் முதல் பந்தை மொயீன் அலி பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம் அணி 222 ரன்களைக் கடந்தது. இவ்வாறாக 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. டி-20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக இலக்கை விரட்டிய அணிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இரண்டாவது இடத்திலும் இந்த அணியே உள்ளது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் மே.இ.தீவுகள் அணி (232 ரன்கள்) உள்ளது.

ஆட்டநாயகன் மாா்கன்

22 பந்துகளில் 57 ரன்கள் (7 சிக்ஸா்கள் உள்பட) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த மாா்கன் ஆட்டநாயகன் விருதை வென்றதுடன், தொடா் முழுவதும் சிறப்பாக விளையாடியதற்காக தொடா் நாயகன் விருதையும் தட்டிச் சென்றாா்.

அதேபோல், இங்கிலாந்துக்காக அதிவேகமாக அரை சதம் பதிவு செய்த முந்தைய சாதனையையும் இந்த ஆட்டத்தில் சமன் செய்தாா் மாா்கன்.

கடந்த ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மாா்கன் 21 பந்துகளில் அரை சதம் பதிவு செய்திருந்தாா்.

இதே தொடரின் முதல் டி-20 ஆட்டத்தில் ஜேசன் ராய் 22 பந்துகளில் அரை சதம் பதிவு செய்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, டி-20 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரா் கிறிஸ் கெயில் 17 பந்துகளில் அரை சதம் பதிவு செய்ததே சாதனையாக உள்ளது.

அவருக்கு அடுத்த இடத்தில் 19 பந்துகளில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வாா்னா் அரை சதம் பதிவு செய்திருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com