2023 வரை மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுவேன். அதன்பிறகு... : பீதியைக் கிளப்பும் விராட் கோலி

எல்லாம் சேர்த்து வருடத்தில் 300 நாள்களும் விளையாடி வருகிறேன். இது உங்களைச் சோர்விழக்கச் செய்யும்...
2023 வரை மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுவேன். அதன்பிறகு... : பீதியைக் கிளப்பும் விராட் கோலி

இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் விளையாடி வருகிறார். ஆனால் அடுத்த மூன்று வருடங்களுக்குப் பிறகு?

அப்போது, இதுபோல மூன்று வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும் விளையாடுவது கடினம் என்று மறைமுகமாகக் கூறியுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

இந்தியா - நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 முதல் தொடங்குகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி கூறியதாவது:

கடந்த எட்டு, ஒன்பது வருடங்களாகப் பயணம் செய்வது, பயிற்சியில் ஈடுபடுவது என எல்லாம் சேர்த்து வருடத்தில் 300 நாள்களும் விளையாடி வருகிறேன். எப்போதும் உற்சாகத்துடன் தான் விளையாடுகிறேன். இது உங்களைச் சோர்விழக்கச் செய்யும். இதைப் பற்றி வீரர்கள் யோசிக்காமல் இல்லை. அதனால் அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்கிறோம். வருங்காலத்தில் பல வீரர்களிடமிருந்து இதை எதிர்பார்க்கலாம். என்னிடமிருந்து மட்டுமல்ல, மூன்று வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும் விளையாடுபவர்கள் தேவைப்படும்போது ஓய்வு எடுப்பார்கள். இது அவ்வளவு சுலபமல்ல.

கேப்டனாகப் பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபவது, ஆட்டம் குறித்துத் திட்டமிடுவது போன்றவை எல்லாம் உங்களை வலுவிழக்கச் செய்யும். எனவே அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்வது எனக்குச் சரியாக இருக்கிறது. எனக்கு 34-35 வயதாகும்போது, என் உடல், கிரிக்கெட் ஆட்டம் கோருவதை நிறைவேற்றாவிட்டால் அப்போது வேறு வகையான உரையாடல்களை வைத்துக்கொள்ளலாம். ஆனால் அடுத்த இரண்டு, மூன்று வருடங்களுக்கு எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. இதே தீவிரத்துடன் பணியாற்ற முடியும். அதேபோல என்னிடமிருந்து அதிகப் பங்களிப்பு அணிக்காகத் தேவைப்படுகிறது. இதன்மூலம் அணியை அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டு செல்லமுடியும். எனவே அடுத்த மூன்று வருடங்களுக்காக என்னைத் தயார் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com