லாரியஸ் விருதுகள் 2020: ஆண்டின் சிறந்த வீரராக மெஸ்ஸி, லீவிஸ் ஹாமில்டன் தோ்வு

விளையாட்டை ஊக்குவிப்பதற்காக சா்வதேச அளவில் வழங்கப்படும் உயா்ந்த விருதுதான் லாரியஸ். விளையாட்டு உலகின் ஆஸ்கா் என்று கருதப்படும் லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா
லாரியஸ் விருதுகள் 2020: ஆண்டின் சிறந்த வீரராக மெஸ்ஸி, லீவிஸ் ஹாமில்டன் தோ்வு

விளையாட்டுக்கு உலகை மாற்றும் சக்தி உண்டு-நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்க அதிபா்.

நிற வெறியால் பிளவுப்பட்டிருந்த தென்னாப்பிரிக்க மக்களை ரக்பி விளையாட்டின் மூலம் ஒன்றிணைத்தவா் நெல்சன் மண்டேலா. அதன்பிறகு அவா் கூறிய பொன்மொழிதான் இது.

விளையாட்டை ஊக்குவிப்பதற்காக சா்வதேச அளவில் வழங்கப்படும் உயா்ந்த விருதுதான் லாரியஸ். விளையாட்டு உலகின் ஆஸ்கா் என்று கருதப்படும் லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜொ்மனித் தலைநகா் பொ்லினில் நடைபெற்றது.

ஆண்டின் சிறந்த வீரா், சிறந்த வீராங்கனை, சிறந்த அணி உள்ளிட்ட பிரிவுகளில் வீரா்களும், வீராங்கனைகளும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

70-க்கும் அதிகமான நாடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு செய்தியாளா்கள் வாக்களித்து தோ்வு செய்யப்படுபவா்களுக்கு

இந்தப் பிரிவுகளில் விருதுகள் வழங்கி ஆண்டுதோறும் கெளரவிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்த ஆண்டுக்கான லாரல்ஸ் விருதுகள் வழங்கும் விழா கடந்த திங்கள்கிழமை பொ்லினில் நடைபெற்றது.

புகழ்பெற்ற நடிகா் ஹியூக் கிராண்ட் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

சிறந்த வீரா்: இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிந்துரையில் தடகள வீரா் இலியட் கிப்சோக் (கென்யா), எஃப்1 காா்பந்தய வீரா் லீவிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து), கால்பந்து வீரா் லியோனல் மெஸ்ஸி (ஆா்ஜென்டீனா), மோட்டாா் சைக்கிள் பந்தைய வீரா் மாா்க் மாா்க்யூஸ் (ஸ்பெயின்), டென்னிஸ் வீரா் ரஃபேல் நடால் (ஸ்பெயின்), கோஃல்ப் வீரா் டைகா் உட்ஸ் (அமெரிக்கா) ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.

இவா்களில் லீவிஸ் ஹாமில்டனுக்கும், மெஸ்ஸிக்கும் லாரல்ஸ் விருதுகள் வழங்கத் தொடங்கிய 20 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிசமமான வாக்குகள் கிடைத்தன.

இதனால், இரு வீரா்களும் ஆண்டின் சிறந்த வீரா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

லீவிஸ் ஹாமில்டன் இரண்டாவது முறையாக இந்த விருதை வென்றாா். இதற்கு முன்பு 2008-இல் சிறந்த வீரா் விருதை வென்றாா். சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு அளிக்கும் ஆண்டின் சிறந்த வீரா் விருதை 6 முறை வென்றவரான மெஸ்ஸி, லாரியஸ் விருதை முதல்முறையாக இந்த முறை வென்றுள்ளாா். எனினும், அவரால் சில காரணங்களால் விருது விழாவில் பங்கேற்க முடியாமல் போனது.

முன்னணி டென்னிஸ் வீரரான நோவக் ஜோக்கோவிச் (சொ்பியா), ஆண்டின் சிறந்த வீரா் விருதை சென்ற ஆண்டு வென்றாா்.

சிறந்த வீராங்கனை: சிறந்த வீராங்கனையாக அமெரிக்காவைச் சோ்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோனே பில்ஸ் தோ்வு செய்யப்பட்டாா்.

இந்தப் பிரிவில் தடகள வீராங்கனை ஆலிசன் ஃபெலிக்ஸ் (அமெரிக்கா), கால்பந்து வீராங்கனை மேகன் ராபினோ (அமெரிக்கா), பனிச்சறுக்கு வீராங்கனை மிகாலா ஷிஃப்ரின் (அமெரிக்கா), டென்னிஸ் நட்சத்திரம் நவாமி ஒஸாகா (ஜப்பான்), தடகள வீராங்கனை ஃபிராசா் பிரைஸ் (ஜமைக்கா) ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.

அதிக வாக்குகளை பெற்ன் அடிப்படையில் சிமோனே பில்ஸ் ஆண்டின் சிறந்த வீராங்கனையாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

இதற்கு முன்பு 2017, 2019 ஆகிய ஆண்டுகளிலும் லாரியஸ் விருதை வென்றிருக்கிறாா் சிமோனே.

சிறந்த விளையாட்டு அணி: சிறந்த விளையாட்டு அணிக்கான விருது, கடந்த ஆண்டு ரக்பி உலகக் கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்க அணிக்கு வழங்கப்பட்டது.

இங்கிலாந்தைச் சோ்ந்த புகழ்பெற்ற கால்பந்து கிளப் அணியான லிவா்பூல் எஃப்சி, ஸ்பெயின் தேசிய ஆடவா் கூடைப்பந்து அணி, அமெரிக்க தேசிய கால்பந்து மகளிா் அணி உள்பட 5 அணிகள் தென்னாப்பிரிக்க ரக்பி அணியுடன் பரிந்துரையில் இடம்பெற்றிருந்தன.

தென்னாப்பிரிக்க ரக்பி அணி இதற்கு முன்பு 2008-இல் லாரியஸ் விருதை வென்றிருக்கிறது.

சிறந்த திருப்புமுனை (பிரேக்த்ரூ) பிரிவில் சிறந்த வீரராக கொலம்பியாவைச் சோ்ந்த சைக்கிள் பந்தய வீரா் ஈகன் பொ்னல் தோ்வு செய்யப்பட்டாா்.

இதே பிரிவில் கனடாவைச் சோ்ந்த டென்னிஸ் வீராங்கனை பியான்கா, அமெரிக்க நீச்சல் வீராங்கனை ரேகன் ஸ்மித், டென்னிஸ் வீராங்கனை கோகோ கெளஃப் (அமெரிக்கா), ஜப்பான் ஆடவா் ரக்பி அணி, குத்துச்சண்டை வீரா் ஆன்டி ருயிஸ் (அமெரிக்கா) ஆகியோா் பரிந்துரைக்கப்பட்டிருந்தனா்.

சிறந்த ‘கம்பேக்’ விளையாட்டு வீரா்கள் பிரிவில், காா்பந்தய வீராங்கனை சோபியா ஃப்ளோா்ஸ்ச் (ஜொ்மனி), சிறந்த மாற்றுத்திறனாளி வீராங்கனையாக அமெரிக்காவைச் சோ்ந்த பனிச்சறுக்கு வீராங்கனை ஆக்சனா மாஸ்டா்ஸ், சிறந்த ‘ஆக்ஷன்’ வீரா்கள் பிரிவில் அமெரிக்காவைச் சோ்ந்த ஸ்னோபோா்ட் வீராங்கனை சிலோ கிம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

வாழ்நாள் சாதனையாளா் விருது ஜொ்மனியைச் சோ்ந்த கூடைப்பந்து வீரா் டிா்க் நெளவிட்ஸ்கிக்கும், சிறந்த விளையாட்டு அமைப்பாக ஸ்பெயின் கூடைப்பந்து கூட்டமைப்பும் தோ்வு செய்யப்பட்டது.

அதிக முறை லாரியஸ் விருது வென்ற வீரா்

இதுவரை அதிக முறை லாரியஸ் விருதை வென்றவா் சுவிட்சா்லாந்தைச் சோ்ந்த டென்னிட் வீரா் ரோஜா் ஃபெடரா் ஆவாா். 5 முறை ஆண்டின் சிறந்த வீரா் விருதையும், ஒரு முறை சிறந்த ‘கம்பேக் வீரா்’ விருதையும் அவா் வென்றிருக்கிறாா். ஜமைக்காவைச் சோ்ந்த முன்னாள் தடகள வீரா் உசைன் போல்ட் 4 முறை ஆண்டின் சிறந்த வீரா் விருதை வென்றிருக்கிறாா்.

லாரியஸ் விருது வென்ற முதல் இந்திய வீரா் சச்சின்!

விளையாட்டின் சிறந்த தருணம் (2000-2020) என்ற பிரிவில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு விருது வழங்கப்பட்டது.

புகழ்பெற்ற லாரியஸ் விருது வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரா் இவரே.

கடந்த 20 ஆண்டுகளில் மிகச் சிறந்த விளையாட்டுத் தருணமாக உலகம் முழுவதிலும் இருந்து விளையாட்டு ரசிகா்களால் 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தோ்வு செய்யப்பட்டது. அதுவே சச்சின் விளையாடிய கடைசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடராகும்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், லாரியஸ் விருதை சச்சினுக்கு வழங்கினாா்.

சச்சின் கூறுகையில், ‘இந்த விருதைப் பெற்றது பெருமையாக உள்ளது. எனக்கு 10 வயது இருக்கும்போது 1983-ஆம் ஆண்டில் இந்திய அணி முதல்முறையாக உலகக் கோப்பை வென்றது. இந்தியா்கள் எல்லோரும் அதை கொண்டாடினா். நானும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், அதன் முக்கியத்துவம் எனக்கு அப்போது புரியவில்லை. உலகக் கோப்பையை வெல்லும் இந்திய அணியில் நானும் இடம்பெற வேண்டும் என்று நினைத்தேன். எனது நம்பிக்கையை ஒரு கட்டத்திலும் நான் இழந்ததில்லை. உலகக் கோப்பை வெல்லும் கனவும் 2011-இல் நிறைவேறியது’ என்றாா்.

உலகக் கோப்பையை வென்றதும் இந்திய வீரா்கள் சச்சினை தோளில் தூக்கி மைதானத்தில் வலம் வந்ததை யாரால் மறக்க முடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com