19 இன்னிங்ஸில் 0 சதம்: தொடரும் விராட் கோலியின் ஏமாற்றங்கள்!

விராட் கோலி கடைசியாக எப்போது சதமடித்தார் என ஞாபகம் உள்ளதா?
19 இன்னிங்ஸில் 0 சதம்: தொடரும் விராட் கோலியின் ஏமாற்றங்கள்!

விராட் கோலி கடைசியாக எப்போது சதமடித்தார் என ஞாபகம் உள்ளதா?

கோலி குறித்து இப்படிக் கேட்பதே விநோதமாக இருக்கிறதுதானே! ஆனால் அப்படிக் கேட்கவேண்டிய நிலைமையை உருவாக்கிவிட்டார் கோலி.

இதுவரை டெஸ்டில் 27 சதங்களும் ஒருநாளில் 43 சதங்களும் எடுத்துள்ளார். இதன்மூலம் சச்சினின் 100 சதங்களைத் தாண்ட கோலியால் மட்டுமே முடியும் என்று எண்ணவைத்துள்ளார்.  

ஆனால் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், முதல் இன்னிங்ஸில் 2 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார் கோலி. இதையடுத்துக் கடந்த 19 இன்னிங்ஸிலும் ஒரு சதமும் எடுக்காமல் ஏமாற்றியுள்ளார் கோலி. 

தற்போதைய நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இதுவரை விளையாடிய 8 இன்னிங்ஸிலும் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. இதன்பிறகு டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்திலும் விளையாடிய 19 இன்னிங்ஸிலும் கோலியால் ஒரு சதம் கூட எடுக்கமுடியவில்லை.

இதுபோல ஒரு மோசமான காலக்கட்டம் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் இருமுறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. 2008 முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் கோலி, 2011-ல் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை விளையாடிய 24 இன்னிங்ஸில் கோலியால் ஒரு சதமும் எடுக்கமுடியாமல் போனது. அடுத்த மோசமான காலக்கட்டம் 2014-ல் நிகழ்ந்தது. பிப்ரவரி முதல் அக்டோபர் வரை 25 இன்னிங்ஸில் கோலி ஒரு சதமும் எடுக்கவில்லை. அந்தக் காலக்கட்டத்தில் இங்கிலாந்தில் விளையாடிய 5 டெஸ்டுகளிலும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். உண்மையில் இதற்குப் பிறகுதான் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் விஸ்வரூபம் ஏற்பட்டது. சதமடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். முக்கியமாக ஒருநாள் கிரிக்கெட்டில் கடகடவென சதங்கள் எடுத்து அசத்தினார். டெஸ்டிலும் சீரான இடைவெளியில் சதங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்.

சரி, இப்போது சதங்கள் தான் இல்லை, அரை சதமாவது எடுத்தாரா என்று பார்த்தாலும் அதுவும் ஏமாற்றத்தைத் தருகிறது. கடந்த 19 இன்னிங்ஸில் 6 அரை சதங்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதேபோல அவுட் ஆஃப் பார்மில் இருந்த 2014-ல் 6 அரை சதங்களும் 2011-ல் 4 அரை சதங்களும் எடுத்தார். ஆக, எப்போதெல்லாம் சதம் எடுக்கத் தடுமாகிறாரோ அப்போது கோலியால் அரை சதம் எடுப்பதும் கடினமாகிவிடுகிறது. 

இந்திய அணி 2018-ல் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது 2014-ல் ஏற்பட்ட சோதனைக்காலக்கட்டத்துக்குப் பதிலடி தரும் விதமாக 5 டெஸ்டுகளில் 593 ரன்கள் எடுத்தார். அதுபோலொரு திருப்பம் மீண்டும் நிகழுமா கோலி?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com