கிரிக்கெட் வரலாற்றில் இன்று: சாத்தியமில்லாததை சாத்தியப்படுத்திய சாதனை நாயகன் (விடியோ)

இந்தியக் கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்து சாதனை புரிந்தார்.
புகைப்படம்: டிவிட்டர் | ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர் | ஐசிசி


இந்தியக் கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்து சாதனை புரிந்தார்.

கிரிக்கெட் வரலாற்றில் சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 24, 2010-இல் குவாலியர் மைதானத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஒருநாள் ஆட்டத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அப்போதைய இந்தியக் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விரேந்தர் சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினர்.

4-வது ஓவரிலேயே சேவாக் ஆட்டமிழந்ததையடுத்து, இந்திய அணி துரிதமாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், அனுபவ வீரராக சச்சின் டெண்டுல்கர் துரிதமாக ரன் குவித்து விளையாடினார். தினேஷ் கார்த்திக்கும் அவருக்கு நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். இந்த இன்னிங்ஸின் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 ஓவர்களும் பேட் செய்த சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.

இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவர் ஒருநாள் ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை சச்சின் படைத்தார். கிரிக்கெட்டில் எப்படிப்பட்ட சாதனையாக இருந்தாலும் தன்னால் தகர்க்க முடியும் என்பதை சொல்லாமல் தகர்த்துக்கொண்டு வந்த சச்சின் டெண்டுல்கர், இதை மற்றுமொரு சாதனை மைல்கல்லாகப் பொறித்து கிரிக்கெட் உலகையே வியக்க வைத்தார்.

கவனத்தில் கொள்ள வேண்டிய உடற்தகுதி:

இந்த ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் 25 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட 200 ரன்கள் குவித்தார். இந்த சாதனையை சச்சின், அவரது இளமைக் காலத்தில் புரியவில்லை. 50 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்து 200 ரன்களை அடித்த சச்சின் டெண்டுல்கருக்கு அப்போது வயது 36 ஆகும். இதன்மூலம், அவரது உடற்தகுதியையும் இந்த இடத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 401 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. எந்தவித சந்தேகமுமின்றி சச்சின் டெண்டுல்கரே ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பு:

ஆட்டநாயகன் விருதை வென்ற பிறகு பேசிய சச்சின் டெண்டுல்கர், "என்னுடைய ஏற்ற இறக்கத்துக்கு நடுவிலும் இந்த 20 ஆண்டுகளாக என் பின்னால் இருக்கும் இந்திய மக்களுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்" என்றார்.

அடுத்த 5 ஆண்டுகளில் கிறிஸ் கெயில்:

சச்சினைத் தொடர்ந்து விரேந்தர் சேவாக், ரோஹித் சர்மா, கிறிஸ் கெயில், மார்டின் கப்தில், ஃபகார் ஸமான் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்தனர். இதில், ரோஹித் சர்மா மட்டுமே மூன்று முறை இரட்டைச் சதம் அடித்து சாதனை புரிந்தார்.

இதில் இந்தியர் அல்லாமல் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் புரிந்தார். 2015 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் கெயில் இரட்டைச் சதம் அடித்தார். அவர் 147 பந்துகளில் 10 பவுண்டரிகள், 16 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 215 ரன்கள் குவித்தார். இதில், சுவாரஸ்யமன விஷயம் என்னவென்றால் சச்சின் டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்த அதே பிப்ரவரி 24-இல்தான் கிறிஸ் கெயிலும் இரட்டைச் சதத்தை அடித்துள்ளார். அதாவது சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் சச்சின் டெண்டுல்கரும், 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் கிறிஸ் கெயிலும் இரட்டைச் சதத்தை அடித்துள்ளனர்.

இரட்டைச் சதம் அடித்த முதல் நபர்:

முன்னதாக, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை பெலிந்தா கிளார்க் டிசம்பர் 16, 1997-இல் டென்மார்க்குக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் இரட்டைச் சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 229 ரன்கள் குவித்தார். எனவே, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த முதல் நபர் என்ற சாதனையை பெலிந்தா கிளார்க் தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com