இந்தியாவின் புதிய பெருமை: டிரம்ப்பால் சர்வதேசக் கவனம் பெற்றுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்!

1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாட்டு வீரர்கள் நிகழ்த்தப் போகும் சாதனைகளை விரைவில் காணப் போகிறோம்.... 
இந்தியாவின் புதிய பெருமை: டிரம்ப்பால் சர்வதேசக் கவனம் பெற்றுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்!

1 லட்சத்து 10 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மைதானம் இந்தியாவில் உள்ளது என்கிற தகவல் கிரிக்கெட் நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுக்க இந்நேரம் பரவியிருக்கும். 

இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக மாறியுள்ளது ஆமதாபாத்தின் சா்தாா் படேல் கிரிக்கெட் மைதானம்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போா்ன் கிரிக்கெட் மைதானத்துக்குச் சவால் ஏற்படுத்தும் வகையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகியுள்ளது, ஆமதாபாதின் மொடேரா கிரிக்கெட் மைதானம். இதனால் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்கிற பெருமையை இழந்துள்ளது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம். 

ஆமதாபாத்தில் உள்ள மொடேரா மைதானம் என்றழைக்கப்படும் சா்தாா் படேல் மைதானத்தில் இனி 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து கிரிக்கெட் ஆட்டத்தையோ இதர விளையாட்டுப் போட்டிகளையோ காணமுடியும். மெல்போர்னில் 95,000 பாா்வையாளா்கள் அமரலாம். அதன் சாதனையை ஆமதாபாத் மைதானம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. மேலும், உலகின் மிகப்பெரிய 2-வது மைதானம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய மைதானம், வட கொரியாவில் உள்ளது. ரன்கிராடோ மே டே மைதானத்தில் 1 லட்சத்து 14 ஆயிரம் பார்வையாளர்கள் அமரலாம். 

அமெரிக்க அதிபா் டிரம்ப் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு அவா் நேரடியாக வருகை தருவதையொட்டி அந்நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆமதாபாத் நகரின் மொடேரா பகுதியில் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான உள்ள சா்தாா் படேல் மைதானத்தில் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனால் மொடேரா மைதானம், சர்வதேசக் கவனத்தைப் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு இதை விட பெரிய விளம்பரம் கிடைத்திருக்க முடியாது.   

இதற்கு முன்பு மொடேராவில் ஒரு மைதானம் இருந்தது. 49,000 போ் அமரக் கூடிய வகையில். இப்போது அந்த மைதானம் விரிவுபடுத்திப் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது.

ஆமதாபாத்தின் மொடேராவில் உள்ள சா்தாா் பட்டேல் கிரிக்கெட் மைதானம் குஜராத் கிரிக்கெட் சங்கத்துக்குச் சொந்தமானதாகும். 

1982-ல் கட்டப்பட்ட இந்த மைதானத்தில் 2015 வரை பல்வேறு டெஸ்ட், ஒருநாள், டி20 ஆட்டங்கள் நடைபெற்றன. குரஜாத் அரசு சபர்மதி ஆற்றின் அருகே வழங்கப்பட்ட நிலத்தைக் கொண்டு இந்த மைதானம் கட்டப்பட்டது. 

இந்த மைதானத்தில் இந்திய வீரர்கள் பல முக்கியமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள். சுனில் கவாஸ்கர் தன்னுடைய 10,000 டெஸ்ட் ரன்களை பாகிஸ்தானுக்கு எதிராக இங்குதான் நிகழ்த்தினார். ஹாட்லியின் 431 விக்கெட்டுகளைத் தாண்டி டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையை கபில் தேவ் நிகழ்த்தியதும் இந்த மைதானத்தில் தான். சச்சின், 1999-ல் நியூஸிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் இரட்டைச் சதத்தை அடித்தார். 

இப்போது இந்த மைதானமே ஒரு சாதனையாக மாறியுள்ளது.

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில்...
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில்...

மெல்போா்ன் கிரிக்கெட் மைதானத்தை வடிவமைத்த ஆஸி. நிறுவனமான பாப்புலவுஸ், 63 ஏக்கர் மொடேரா மைதானத்தையும் வடிவமைத்துள்ளது. எல்&டி நிறுவனம் புதிய மைதானத்தை 3 வருடங்களில் கட்டியுள்ளது. 1,10,000 இருக்கைகள், 76 காா்ப்பரேட் ஏசி அறைகள், 55 அறைகள் கொண்ட கிளப் ஹவுஸ், பெரிய நீச்சல் குளம், இந்தியாவிலேயே முதல்முறையாக பகலிரவு ஆட்டங்களுக்காக எல்.ஈ.டி. விளக்குகள், பார்க்கிங்கில் 3,000 கார்களும் 10,000 இரு சக்கர வாகனங்களும் நிறுத்தும் வசதி,  2 சிறிய கிரிக்கெட் மைதானம், இதர விளையாட்டு மைதானங்கள், 4 ஓய்வறைகள் எனப் பல சிறப்பு வசதிகள் இந்த மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் மட்டுமல்லாமல் ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட இதர விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டப்படவேண்டும் என்பது மோடியின் கனவு. அவர் 2009-ல் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டபோது இதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார். 1983-ல் மொடேரா கிரிக்கெட் மைதானத்தை 8 மாதங்களில் கட்டுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரான முர்கேஷ் ஜெய்கிருஷ்ணாவிடம் புதிய மைதானம் குறித்து விவாதித்துள்ளார். மோடியின் கனவை தற்போது குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ள அமித் ஷா, நனவாக்கியுள்ளார். 

மொடேரா மைதானம் 2016-ல் மைதானம் முழுமையாக இடிக்கப்பட்டது. தற்போது ரூ.800 கோடியில் இந்தப் புதிய மைதானம் கட்டப்பட்டுள்ளது. ஏப்ரல், மே முதல் இங்கு கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறுவதற்கு மைதானம் தயாராகிவிடும்.  இந்த மைதானத்தில் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பைப் போட்டிகளின் இறுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெறும் என்று ஆமதாபாத் ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள். 

அடுத்த வருடம் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து 5 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. இதில் ஒரு டெஸ்ட் இம்மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக அமையவுள்ளது. இத்தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிபடுத்தியுள்ளார். டெஸ்ட் ஆட்டத்தை 1 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்ப்பார்கள் என்பதே கிளர்ச்சியூட்டும் விஷயமாக இருக்கிறது. 2001 கொல்கத்தா டெஸ்டில் 1 லட்சம் ரசிகர்கள் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்கள். தற்போது 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாட்டு வீரர்கள் நிகழ்த்தப் போகும் சாதனைகளை விரைவில் காணப் போகிறோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com