முதல் டெஸ்டை மறந்துவிடுங்கள்: இந்திய வீரர்களுக்கு ரஹானே வேண்டுகோள்!

முதல் டெஸ்டில் நடந்ததை மறந்துவிடுங்கள். ஆனால் அதில் செய்த தவறுகளிலிருந்து...
முதல் டெஸ்டை மறந்துவிடுங்கள்: இந்திய வீரர்களுக்கு ரஹானே வேண்டுகோள்!

இந்தியா - நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 அன்று தொடங்கியது. முதல் டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. இதனால் டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட், பிப்ரவரி 29 அன்று தொடங்கவுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் இந்திய வீரர்  ரஹானே கூறியதாவது:

முதல் டெஸ்டில் என்ன தவறு செய்தோமோ அதை 2-வது டெஸ்டில் சரி செய்யவேண்டும். ஒரு பேட்ஸ்மேன் தற்போதைய நிலையில் கவனம் செலுத்தவேண்டும். பழசை மறக்கவேண்டும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒவ்வொரு டெஸ்டும் முக்கியமானது. 

டெஸ்ட் தொடரை வெல்வது மட்டும் முக்கியமல்ல. ஏனெனில் இங்கு ஒரு டெஸ்டில் வென்றாலும் 60 புள்ளிகளை அள்ளி புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி வெகுவாக முன்னேறிவிடும். அதனால் தான் சொல்கிறேன். முதல் டெஸ்டில் நடந்ததை மறந்துவிடுங்கள். ஆனால் அதில் செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு 2-வது டெஸ்டில் கவனம் செலுத்தவேண்டும். 

2-வது டெஸ்டுக்கான ஆடுகளம், பேட்டிங்குக்கு ஏற்றவாறு, ஷாட்களை அடிக்கும் விதத்தில் அமையும். ஆடுகளம் மற்றும் சூழலை எப்போதும் எண்ணிக்கொண்டிருக்க முடியாது. ஒருகட்டத்தில் அவற்றைத் தாண்டிச் சென்று எப்படி ரன் எடுக்கவேண்டும் என்று பார்க்கவேண்டும். இந்திய ஏ அணியினர் அதிகாரபூர்வமற்ற டெஸ்டைக் கடந்த மாதம் இங்கு ஆடினார்கள். இந்த ஆடுகளம், முதல் டெஸ்டில் பார்த்ததை விடவும் நன்றாக இருப்பதாக அந்த ஆட்டத்தில் இடம்பெற்ற விஹாரி கூறினார். முதல் நாளிலேயே ஆடுகளம் பற்றி அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு விளையாடவேண்டும்.

அஸ்வின், ஜடேஜா இருவரில் யார் விளையாடுவார்கள் எனக் கேட்கிறீர்கள். இருவருமே தரமான பந்துவீச்சாளர்கள். ஆடுகளத்தைப் பார்த்தபிறகே கேப்டன் இதுகுறித்து முடிவு செய்வார் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com