முதல் நாளிலேயே வேதனை: இந்தியா 242, நியூஸிலாந்து 63/0

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
முதல் நாளிலேயே வேதனை: இந்தியா 242, நியூஸிலாந்து 63/0

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. நியூஸி. வீரர் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூஸிலாந்து அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 அன்று தொடங்கியது. முதல் டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. இதனால் டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட், இன்று தொடங்கியுள்ளது. 

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்த முறையும் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் அஸ்வின், இஷாந்த் சர்மாவுக்குப் பதிலாக ஜடேஜா, உமேஷ் யாதவ் இடம்பெற்றார்கள். 

முதல் டெஸ்டில் நன்கு விளையாடிய மயங்க் அகர்வால், இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு பிரித்வி ஷாவும் புஜாராவும் நல்ல கூட்டணியை அமைத்தார்கள். 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் விரைவாக 54 ரன்கள் எடுத்த பிரித்வி ஷா, ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த அரை சதத்தின் மூலம் இந்திய அணியின் 3-வது தொடக்க வீரராக நிலை பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்தில் ஒரே ஒரு அரை சதமெடுத்து மோசமாக விளையாடி வரும் கேப்டன் கோலி, இன்றும் ஏமாற்றினார். அவர் 3 ரன்களில் செளதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மிகவும் நம்பிக்கையளிக்கும் ரஹானே, 7 ரன்களில் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தினார். இதன்பிறகு புஜாராவும் விஹாரியும் நல்ல கூட்டணியை அமைத்து ஸ்கோரை ஏற்றினார்கள். கடகடவென பவுண்டரிகள் அடித்து விரைவாக ரன்கள் குவித்த விஹாரி, 55 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு இந்திய அணியின் சரிவை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

புஜாரா, 140 பந்துகளை எதிர்கொண்டு 54 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பேட்டிங்குக்காக அணியில் சேர்க்கப்பட்ட ரிஷப் பந்த், 12 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூஸி. வீரர்கள் இருமுறை கேட்சுகளைத் தவறவிட்டும் அதை ரிஷப் பந்த் பயன்படுத்திக்கொள்ளவில்லை. உமேஷ் யாதவ் ரன்கள் எடுக்காமலும் ஜடேஜா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். கடைசி விக்கெட்டுக்கு ஷமியும் புஜாராவும் 26 ரன்கள் சேர்த்தார்கள். இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்த ஷமி, போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 63 ஓவர்களில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜேமிசன் 5 விக்கெட்டுகளையும் செளதி, போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

நியூஸிலாந்து தொடக்க வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கினார்கள். காலை முதல் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் அசத்திய நிலையில் மாலையில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் அளித்தார்கள். திடீரென ஆடுகளத்தின் தன்மை மாறிவிட்டதைப் போல ரசிகர்கள் உணர்ந்தார்கள்.

ஆடுகளத்துக்குத் தேவையான ஸ்விங் பந்துவீச்சை வெளிப்படுத்த தவறினார்கள். இந்தியப் பந்துவீச்சாளர்களின் அதிவேகப் பந்துவீச்சு மட்டுமே போதுமானதாக இல்லை. இதனால் நியூஸி. பேட்ஸ்மேன்களுக்குப் பெரிய சிரமம் எதுவும் ஏற்படவில்லை. 

நியூஸிலாந்து அணி முதல் நாள் முடிவில் 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. டாம் பிளண்டல் 29, டாம் லதம் 27 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். நியூஸிலாந்து அணிக்கு 10 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 179 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com