வயது மோசடியில் வீரருக்குத் தடை: இந்திய அணியின் கிரிக்கெட் உலகக் கோப்பை செல்லத்தக்கதா?

இந்திய அணி வென்ற 2018 யு-19 உலகக் கோப்பை செல்லத்தக்கதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
வயது மோசடியில் வீரருக்குத் தடை: இந்திய அணியின் கிரிக்கெட் உலகக் கோப்பை செல்லத்தக்கதா?

23 மாதங்களுக்கு முன்பு, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை (யு-19) இந்திய அணி வென்றது. 2018-ல் நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சதமடித்த மன்ஜோத் கல்ரா, ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

ஆனால் வயதைத் தவறாகக் குறிப்பிட்ட குற்றச்சாட்டில் தற்போது சிக்கியுள்ளார் கல்ரா. இதையடுத்து, ரஞ்சிப் போட்டியில் விளையாட அவருக்கு ஒரு வருடம் தடை விதித்துள்ளது தில்லி கிரிக்கெட் சங்கம். மேலும் இளையோர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 2 வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது. யு-16, யு-19 போட்டிகளில் விளையாடியபோது வயதைத் தவறாகக் குறிப்பிட்டதால் கல்ராவுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

கல்ராவுக்கு பிசிசிஐயின் ஆவணங்களின்படி தற்போது 20 வயது. கடந்த வாரம் யு-23 போட்டியில் தில்லி அணிக்காக விளையாடினார். ரஞ்சிப் போட்டியில் ஷிகர் தவனுக்குப் பதிலாக தில்லி அணியில் இடம்பெற இருந்தார் கல்ரா. அதற்குள் எல்லாமே மாறிவிட்டது.

இந்நிலையில் இந்திய அணி வென்ற 2018 யு-19 உலகக் கோப்பை செல்லத்தக்கதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஐசிசி விதிகளின்படி 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் மட்டுமே யு19 போட்டிகளில் பங்கேற்க முடியும். தனது பிறந்த தேதி 1999, ஜனவரி 5 என பிசிசிஐயிடம் ஆவணங்களை வழங்கியுள்ளார் கல்ரா. ஆனால் ஒரு வருடத்தைக் குறைத்து தகவல் சொன்னதாக கல்ரா மீது குற்றச்சாட்டு விழுந்து அது தற்போது நிரூபணமும் ஆகியுள்ளது. அதனால் அவர் தண்டனை பெற்றுள்ளார். 

2015-லேயே கல்ரா மீது முன்னாள் தில்லி கேப்டன் கீர்த்தி ஆஸாத் புகார் அளித்தார். தில்லி காவல்துறையும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது. 2017-ல் கல்ராவின் வயது குறித்த ஆவணங்களை விசாரிக்க நடவடிக்கை எடுத்தது தில்லி கிரிக்கெட் சங்கம். எனினும் இந்தப் பிரச்னை தற்போது ஓராண்டு தடை வரை வந்துள்ளதைப் பெரிய அவமானமாகப் பலரும் பார்க்கிறார்கள். கல்ரா விவகாரத்தில் அவருடைய பெற்றோர் மீது தில்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. தில்லி அணியில் விளையாடுவதற்காக ஒரு வயதைக் குறைத்துள்ளார்கள் என்பது அவர்கள் மீதான குற்றச்சாட்டு. எனினும் கல்ராவின் பெற்றோர் இதை மறுத்துள்ளார்கள். பள்ளியில் அனுமதிக்கும்போது உறவினர் ஒருவர் வருடத்தைத் தவறாகக் கொடுத்துவிட்டார். பிறகு நாங்கள் நேரில் சென்று அதைச் சரி செய்தோம் என்று கூறியுள்ளார். இதே குற்றச்சாட்டு ஐபிஎல் நட்சத்திரம் நிதிஷ் ராணாவும் மீதும் விழுந்துள்ளது. 

இந்நிலையில் யு-19 உலகக் கோப்பைப் போட்டியின்போது நிச்சயம் 19 வயதைத் தாண்டியிருப்பார் கல்ரா. சரியான பிறந்த தேதியைக் கொடுத்திருந்தால் கல்ராவால் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றிருக்க முடியாது. ஆனால் பிசிசிஐ, தில்லி கிரிக்கெட் சங்கம் என இரு அமைப்புகளும் கல்ரா தொடர்ந்து விளையாட அனுமதி அளித்தன. இதனால் தற்போதைய நிலைக்கு இரு அமைப்புகளும் விமரிசனங்களைச் சந்தித்து வருகின்றன. யு-19 உலகக் கோப்பை போட்டியில் கல்ரா, 5 ஆட்டங்களில் 252 ரன்கள் எடுத்தார். 

எனினும் ஐசிசியால் தற்போது இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஒரு வீரருக்கும் மேற்பட்டவர்கள் தவறு செய்தால் தான் ஒட்டு மொத்த அணியையும் தண்டிக்க முடியும் என்பது ஐசிசி விதிமுறையாக இருப்பதால் இந்திய அணி பெரிய சிக்கலில் இருந்து தப்பித்துள்ளது. எனினும் இந்திய அணி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காது. இந்திய அணியின் உலகக் கோப்பையைப் பறிக்க வேண்டும் என்கிற விமரிசனங்களும் ஐசிசி மீது எழுந்துள்ளன.

மன்ஜோத் கல்ரா விவகாரம் பிசிசிஐக்கு மட்டுமல்லாமல் ஐசிசிக்கும் தர்மசங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சிக்கல் மேலும் ஏற்படாமல் இருக்க என்ன தீர்வு உள்ளது இரு அமைப்புகளிடமும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com