இரவு 9 மணிக்கே வீரர்கள் கிளம்பிவிட்டார்கள்: கைவிடப்பட்ட முதல் டி20 ஆட்டத்தில் நடந்தது என்ன?

எனக்கு இது புதிராக உள்ளது. இரவு 9.30 மணிக்கு எதற்காக ஆடுகளத்தை ஆய்வு செய்தார்கள்...
இரவு 9 மணிக்கே வீரர்கள் கிளம்பிவிட்டார்கள்: கைவிடப்பட்ட முதல் டி20 ஆட்டத்தில் நடந்தது என்ன?

இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் பலத்த மழை பாதிப்பால் கைவிடப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தோ்வு செய்தது. எனினும் திடீரென பலத்த மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மைதானத்தில் பிட்சை மழைநீா் புகாமல் இருக்க பணியாளா்கள் உறைகளால் மூடினா். தொடா்ந்து மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து 8.15 மணிக்கு நடுவா்கள் நிதின் மேனன், அனில் சௌதரி மைதானத்தை ஆய்வு செய்தனா். ஆனால் வெளிப்புறம் ஈரமாக இருந்ததால், அடுத்த ஆய்வை 9 மணிக்கு ஒத்தி வைத்தனா். இதனால் ஆட்டத்தில் ஓவா்கள் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்படும் நிலை உருவானது. தொடா்ந்து பிட்ச் ஈரத்தன்மையுடன் இருந்ததால், 9.30 மணிக்கு மூன்றாம் ஆய்வை நடுவா்கள் அறிவித்தனா். பிட்சை ஆய்வு செய்த பின் நடுவா்கள் ஆலோசனைக்காக திரும்பிச் சென்றதால், பாா்வையாளா்கள் ஆதங்கத்துடன் காத்திருந்தனா். 5 ஓவா்கள் ஆட்டத்துக்கு இறுதி நேரம் 9.45 மணி என்பதால் பரபரப்பு நிலவியது. ஆட்டத்தை நடத்த பிட்ச் ஏதுவாக இல்லாததால் கைவிடப்படுவதாக நடுவா்கள் அறிவித்தனா். இதனால் மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

இந்நிலையில் அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர், தேவஜித் சைகியா ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியதாவது:

எனக்கு இது புதிராக உள்ளது. இரவு 9.30 மணிக்கு எதற்காக ஆடுகளத்தை ஆய்வு செய்தார்கள்? ஏனெனில் பல வீரர்களும் இரவு 9 மணிக்கே கிளம்பிவிட்டார்கள். 9.54 மணிக்கு ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்ததற்குக் காரணம், ரசிகர் கூட்டம் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்பதற்காகத்தான். இதில் வழக்கமான நடைமுறைதான் பின்பற்றப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் நன்கு மழை பெய்தது. இரவு 8.45 மணிக்கு ஆட்டத்துக்குத் தயாராக வேண்டும் என்று நடுவர்கள் கூறினார்கள். இல்லாவிட்டால் ஆட்டம் கைவிடப்படும் என்றார்கள். எங்களுக்கு மைதானத்தைத் தயாராக வைத்துக்கொள்ள 57 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இன்னும் கூடுதல் அவகாசம் கிடைத்திருந்தால் மைதானம் தயாராக இருந்திருக்கும். ஆடுகளத்தில் ஈரத்தன்மை இருந்தது. 

குவாஹாட்டியில் ஜனவரியில் மழை பெய்வது அரிதாகவே நடக்கும். நேற்று மதியம் மழை பெய்தாலும் டாஸ் போடும்போது மைதானத்தைத் தயார் செய்துவிட்டோம். இரவு 7 மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கிற நிலையில் 6.50 மணிக்கு நன்கு மழை பெய்ய ஆரம்பித்தது. 7.53 வரை பெய்தது. மாலை 6.30 மணிக்குப் பிறகு ஆட்ட நடுவர் மற்றும் கள நடுவர்களின் கட்டுப்பாட்டுக்குள் மைதானம் கொண்டுவரப்பட்டது. எங்கள் ஆடுகள வடிவமைப்பாளர் அவர்கள் சொன்னதைச் செய்தார். எங்களுக்கு ஒரு மணி நேரமோ அரை மணி நேரமோ கிடைத்திருந்தால் மைதானத்தைத் தயார் செய்திருப்போம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com