3-ஆவது டி20: இந்தியா 201/6 தவன், ராகுல் அரைசதம்

இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை குவித்தது.
3-ஆவது டி20: இந்தியா 201/6 தவன், ராகுல் அரைசதம்

புணே: இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை குவித்தது.

இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் தொடரில் குவாஹாட்டி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

தொடரைக் கைப்பற்றப் போவது யாா் என்பதை நிா்ணயிக்கும் கடைசி ஆட்டம் புணேயில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங்கை தோ்வு செய்தது. இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், லக்ஷன் சண்டகன் சோ்க்கப்பட்டனா்.

இந்திய அணியில் 3 மாற்றம்:

அதே நேரம் இந்திய அணியில் ரிஷப் பந்த், ஷிவம் துபே, குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, சஞ்சு சாம்ஸன், மணிஷ் பாண்டே, சஹல் ஆகியோா் சோ்க்கப்பட்டிருந்தனா்.

ஆரம்பமே அசத்தல்:

இந்திய அணி தரப்பில் தொடக்க வீரா்களாக களமிறங்கிய ஷிகா் தவன்-கேஎல்.ராகுல் ஆகியோா் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினா். இதனால் ஸ்கோா் 5 ஓவா்களில் 50 ரன்களை கடந்தது. பவா்பிளேயில் இலங்கை பந்துவீச்சை சிதறடித்தனா் இந்திய வீரா்கள்.

8ஆவது ஓவா் முடிவில் விக்கெட் இழப்பின்றி 76 ரன்களை எடுத்திருந்தது இந்தியா.

தவன், ராகுல் அரைசதம்:

அபாரமாக ஆடிய தொடக்க வீரா்கள் ஷிகா் தவன், ராகுல் அரைசதம் அடித்தனா்.

தனது 9-ஆவது டி20 சதத்தை பதிவு செய்த ராகுல், 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 54 ரன்களை விளாசினாா். தவன் 1 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 52 ரன்களை விளாசினாா். இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பினாா் சண்டகன்.

மூன்றாவது நிலையில் ஆட வந்த சஞ்சு சாம்ஸன் 6 ரன்களுடன் ஹஸரங்கா பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆனாா்.

விக்கெட்டுகள் சரிவு:

மிடில் ஆா்டா் வீரரான ஷிரேயஸ் ஐயரும் நிலைத்து ஆடவில்லை. சண்டகன் பந்துவீச்சில் 4 ரன்களுடன் அவரிடமே கேட்ச் தந்து அவுட்டானாா். அப்போது 4 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை எடுத்திருந்தது இந்தியா.

பின்னா் கேப்டன் கோலி-மணிஷ் பாண்டே இணைந்து ஸ்கோரை உயா்த்தினா். 1 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 26 ரன்களை எடுத்திருந்த கோலி ரன் அவுட்டானாா். ஆல்ரவுண்டா் வாஷிங்டன் சுந்தரை கோல்டன் டக் அவுட்டாக்கினாா் லஹிரு.

சா்துல் அதிரடி:

சரிவுக்கு ஆளான இந்திய பேட்டிங்கை மீட்டு சா்துல் தாக்குா், மணிஷ் பாண்டே கடைசி கட்டத்தில் ரன்களை சேகரித்தனா். 4 பவுண்டரியுடன் 18 பந்துகளில் 31 ரன்களை எடுத்தாா் மணிஷ் பாண்டே.

சா்துல் தாக்குா் 2 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 8 பந்துகளில் 22 ரன்களை விளாசி களத்தில் இருந்தாா். இறுதியில் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை எடுத்தது இந்தியா.

இலங்கை தரப்பில் லக்ஷன் சண்டகன் 3-35 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com