வயதாகிவிட்டதால் முன்பு போல வேகமாகப் பந்துவீச முடியாது: பிராவோ

மீண்டும் தேர்வானதற்கு மிக்க மகிழ்ச்சி. மீண்டும் குழந்தை போல உணர்கிறேன்.
வயதாகிவிட்டதால் முன்பு போல வேகமாகப் பந்துவீச முடியாது: பிராவோ

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மீண்டும் தேர்வானதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ஆல்ரவுண்டர் பிராவோ.

அக்டோபர் 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பிராவோ. 2004-ல் அறிமுகமான பிராவோ இதுவரை 40 டெஸ்டுகள், 164 ஒருநாள், 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

36 வயதான பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளுக்கு முக்கியத்துவம் தருவதாலும் காயங்கள் காரணமாகவும் கிரிக்கெட் சங்கத்துடனான மோதல்களாலும் அவரால் அதிகமான சர்வதேச ஆட்டங்களில் விளையாட முடியாமல் போய்விட்டது. ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாகக் கடந்த அக்டோபர் மாதம் அவர் அறிவித்தார். பிறகு, கடந்த மாதம் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றார் பிராவோ.

இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான மே.இ. தீவுகள் அணியில் இடம்பிடித்துள்ளார் பிராவோ. கடைசி ஓவர்களில் அணியின் பந்துவீச்சைப் பலப்படுத்துவதற்காக பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார் என்று மே.இ. தீவுகள் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் ரோஜர் ஹார்பர் கூறியுள்ளார். மே.இ. தீவுகள் - அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் புதன் முதல் தொடங்கவுள்ளது. 

இதுகுறித்து பிராவோ பேட்டியளித்ததாவது:

மீண்டும் தேர்வானதற்கு மிக்க மகிழ்ச்சி. மீண்டும் குழந்தை போல உணர்கிறேன். மே.இ. தீவுகள் கிரிக்கெட்டில் தலைமை மாறியபோது இதை நான் எதிர்பார்த்தேன். என் திறமையை வெளிப்படுத்த ஆவலாக உள்ளேன். 

இப்போது எனது உடற்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். நான்கு மாதங்களாக விளையாடாதபோதும் டி10 கிரிக்கெட்டில் விளையாடி, அணிக்குக் கோப்பையைப் பெற்றுத் தந்தேன். டிசம்பரில் மீண்டும் விளையாடுவது குறித்து அறிவித்த பிறகு இந்தத் தொடரில் விளையாட வேண்டும் என எண்ணினேன். வயதாகிவிட்டதால் முன்பு போல வேகமாகப் பந்துவீச முடியாது. ஆனால், இப்போது நான் புத்திசாலித்தனமான பந்துவீச்சாளராக மாறியிருக்கிறேன். கிரிக்கெட் தொடர்பான வியூகங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளேன். 

கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசுவது என்பது கலை. கடைசிப் பத்தாண்டுகளில், கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக் கூடிய ஐந்து வீரர்களில் மலிங்கா, பும்ரா, ஸ்டார்க் ஆகியோருடன் என் பெயரும் இருக்கும். கடைசி ஓவரைச் சரியாக வீசாவிட்டால் அதனால் தான் அணி தோற்றது என்பார்கள். ஆனால் நன்றாக வீசி அணிக்கு வெற்றியைத் தேடித் தரும்போது யாரும் அதைக் குறிப்பிட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து டி20 உலகக் கோப்பையில் பிராவோ விளையாடுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் மே.இ. தீவுகள் அணி உலகக் கோப்பையை வென்றபோது பிராவோவும் அந்த அணியில் இடம்பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com