கே.எல். ராகுலுக்காக ஒரு படி கீழே இறங்கி விளையாடும் கோலி! ரசிகர்கள் அதிர்ச்சி!

அணியின் நலனுக்காக என்று கோலி மெனக்கெடும் சில விஷயங்கள் அதீதமாகி விடுகின்றன...
கே.எல். ராகுலுக்காக ஒரு படி கீழே இறங்கி விளையாடும் கோலி! ரசிகர்கள் அதிர்ச்சி!

ஒருநாள் கிரிக்கெட்டில் 3-ம் நிலை வீரராக விளையாடி தனக்கும் அணிக்கும் ஏராளமான பலன்களை ஏற்படுத்தியவர் விராட் கோலி. ஆனால் இன்றைய ஒருநாள் ஆட்டத்தில் அவர் எடுத்த ஒரு முடிவு பலத்த விமரிசனங்களை உருவாக்கியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர், மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் டுபே, மணீஷ் பாண்டே, கெதர் ஜாதவ், சஹால், நவ்தீப் சைனி ஆகியோர் விளையாடவில்லை. இதனால் இந்திய அணியில் ரோஹித், ராகுல், தவன் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளார்கள். இதனால் கெதர் ஜாதவ் அணியில் இடம்பெறவில்லை. ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக அணியில் இடம்பெற்றுள்ளார். 

தோனி அணியில் இல்லாததால் ரோஹித்துடன் சேர்த்து ராகுல், தவன் ஆகிய மூன்று தொடக்க வீரர்களை அணியில் சேர்க்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார் கோலி. நடுவரிசை, பின்வரிசையில் ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், ஜடேஜா போன்ற வீரர்கள் இருப்பதால் ஆரம்பத்தில் மூன்று, நான்கு விக்கெட்டுகள் விழுந்தால் அணியின் நிலைமையைச் சரிகட்டுவதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார். 

இதுமட்டுமல்லாமல் 3-ம் நிலை வீரராக கோலிக்குப் பதிலாக ராகுல் இன்று களமிறங்கியுள்ளார். இதுதான் பலரையும் கடுப்பாக்கியுள்ளது.

புள்ளிவிவரங்களின்படி 3-ம் நிலை வீரராக 180 இன்னிங்ஸில் 63.39 ரன்கள் சராசரி வைத்துள்ளார் கோலி. கம்பீர், சச்சின், சேவாக் இந்திய அணியில் விளையாடியபோது 4-ம் நிலை வீரராக 38 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 56.48 ரன்கள் சராசரி வைத்துள்ளார் கோலி. அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக சராசரிகளைக் கொண்டு 3-ம் நிலை வீரராகச் சாதித்துள்ள விராட் கோலி தேவையில்லாமல் ராகுலுக்காக 4-ம் நிலை வீரராகக் களமிறங்குவதை ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் நிபுணர்களும் விமரிசித்துள்ளார்கள். 

மேலும் உலகக் கோப்பைப் போட்டியில் ராகுல் அணியில் இடம்பெற்றபோது ஆரம்பத்தில் நான்காம் நிலை வீரராகவே விளையாடினார். பிறகு தவனுக்குக் காயம் ஏற்பட்ட பிறகுதான் தொடக்க வீரராக விளையாடினார். அதேபோல இன்றைய ஆட்டத்திலும் ராகுலை 4-ம் நிலை வீரராகக் களமிறக்கியிருக்கலாம் என்பது பலருடைய கருத்தாக உள்ளது.

இதுமட்டுமல்லாமல் ஷ்ரேயஸ் ஐயரை 4-ம் நிலை வீரராக நீண்ட நாள் விளையாட வைக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அவரை 5-ம் நிலை வீரராக விளையாட வைப்பது அணியின் பேட்டிங் வரிசையை, அதன் திட்டங்களைச் சீர்குலைப்பதாகவே உள்ளது.

அணியின் நலனுக்காக என்று கோலி மெனக்கெடும் சில விஷயங்கள் அதீதமாகி விடுகின்றன. இதற்கு முன்பு இந்திய டெஸ்ட் அணியிலிருந்து புஜாரா, புவனேஸ்வர் குமார் ஆகியோரை நீக்கியது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. அதுபோல இன்று ஆகிவிடக் கூடாது என்பதுதான் பலருடைய பிரார்த்தனையாக உள்ளது.

கோலியின் புதிய திட்டங்களுக்கு இன்று வெற்றி கிடைக்குமா? இது நீண்ட நாள் நீடிக்கவுள்ள திட்டமா அல்லது இன்றைய ஆட்டத்துக்கும் மட்டும் தானா? பல சிக்கலான கேள்விகளுக்கு விடை தேடவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com