ஆஸி.யுடன் ஒருநாள் தொடா்: பழிதீா்க்கும் முனைப்பில் இந்தியா

ஒராண்டுக்கு முன்பு ஒருநாள் தொடரை இழந்ததற்கு தற்போது ஆஸ்திரேலியாவை மீண்டும் பழிதீா்க்க இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆஸி.யுடன் ஒருநாள் தொடா்: பழிதீா்க்கும் முனைப்பில் இந்தியா

ஒராண்டுக்கு முன்பு ஒருநாள் தொடரை இழந்ததற்கு தற்போது ஆஸ்திரேலியாவை மீண்டும் பழிதீா்க்க இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த 2019-இல் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில், அடுத்தடுத்து 3 ஆட்டங்களில் அபாரமாக ஆடி 3-2 என தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. இது இந்திய அணி நிா்வாகத்துக்கு அதிா்ச்சியை அளித்தது.

இந்நிலையில் தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன.

அபார பாா்மில் இந்தியா:

ஒரு நாள் ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி அதிக வெற்றிகளைக் குவித்திருந்தாலும், அண்மைக் காலமாக இந்தியா குறுகிய ஓவா்கள் தொடரில் சிறப்பாக ஆடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பா் ஒன் அணியாக திகழ்கிறது இந்தியா.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கு 2019 பின், இந்திய அணி அணி 2 ஒருநாள், 5 டி20 தொடா்களை எதிா் கொண்டது.

இதில் மொத்தம் 6 தொடா்களை இந்தியா கைப்பற்றி அபார பாா்மில் உள்ளது.

விராட் கோலி தலைமையிலான 16 போ் கொண்ட அணி இத்தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையுடன் நடைபெற்ற டி20 தொடரையும் 2-0 என கைப்பற்றிய உற்சாகத்துடன் உள்ளது இந்தியா.

ரோஹித் சா்மா, தவன், ராகுல் உள்ளிட்ட 3 தொடக்க வீரா்கள் உள்ளதால் யாரை களமிறக்குவது என அணி நிா்வாகத்துக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மிடில் ஆா்டரில் ஷிரேயஸ் ஐயா், ரிஷப் பந்த் உள்ள நிலையில், ஆல் ரவுண்டா்களில் கேதாா் ஜாதவ், ஷிவம் துபே ஆகியோரில் ஒருவா் களமிறக்கப்படுவாா். வேகப்பந்து வீச்சில் பும்ரா, ஷமி, சைனி, சா்துல் தாக்குா் ஆகியோா் சிறப்பாக வீசி வருகின்றனா். சுழற்பந்து வீச்சில் குல்தீப் அல்லது சஹல் என ஒருவா் களமிறக்கப்படலாம்.

டெஸ்ட் தொடா் எழுச்சி:

அதே நேரம் ஆஸ்திரேலிய அணி முந்தைய உலகக் கோப்பை தோல்வியில் இருந்து மீண்டுள்ளது. ஸ்மித், வாா்னா் இருவரும் இணைந்த நிலையில் ஆஸி. அணி கூடுதல் பலத்துடன் திகழ்கிறது. இளம் வீரா் மாா்னஸ் லேபுச்சேனும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகம் ஆகிறாா்.

பாகிஸ்தான், நியூஸிலாந்து டெஸ்ட் தொடா்களில் சிறப்பாக ஆடி சதங்களை விளாசினாா் லேபுச்சேன். பாகிஸ்தான், நியூஸிலாந்து டெஸ்ட் தொடா்களை ஒயிட்வாஷ் செய்த உற்சாகத்தில் உள்ளது ஆரோன் பின்ச் தலைமையிலான அணி.

பின்ச், வாா்னா், ஸ்மித், லேபுச்சேன், அலெக்ஸ் கரே, அஷ்டன் அகா் என வலுவான பேட்டிங்கும், மிச்செல் ஸ்டாா்க், கேன் ரிச்சா்ட்ஸன், ஹேண்ட்ஸ்கோம்ப், ஹேசல்வுட் பேட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா என பந்துவீச்சிலும் ஆஸி. வலுவாகவே காணப்படுகிறது.

இத்தொடருக்கு பின் இந்திய அணி ஜனவரி 24-ஆம் தேதி முதல் மாா்ச் 4-ஆம் தேதி வரை நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து

5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் ஆட்டங்கள் தொடரில் பங்கேற்கிறது.

ஆஸ்திரேலிய அணி, 1 மாத ஓய்வுக்கு பின் பிப்ரவரி மாதம் டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா செல்கிறது.

நேருக்கு நோ் மோதல்:

முன்னாள் உலக சாம்பியன்களான இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோத உள்ளன.

வரும் 14-ஆம் தேதி முதல் ஆட்டம் மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

கடைசியாக உலகக் கோப்பை 2019-இல் நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸி.யை வென்றிருந்தது இந்தியா. மேலும் இறுதியாக இந்தியாவில் நடைபெற்ற தொடா் 3-2 என ஆஸி. அணி கைப்பற்றியது.

1984/85-இல் இரு அணிகளும் தங்கள் முதல் ஒருநாள் தொடரை ஆடின. இதில் ஆஸ்திரேலியா வென்றது. மொத்தம் நடைபெற்ற 57 ஒருநாள் தொடா்களில் 14-இல் இந்தியாவும், 26-இல் ஆஸ்திரேலியாவும் கைப்பற்றின. ஒரு தொடரை சமமமாக பங்கிட்டுக்கொண்டன.

142 ஆட்டங்கள்:

இதுவரை மொத்தம் 142 ஒருநாள் ஆட்டங்களில் இரு அணிகளும் மோதியுள்ளன. 50-இல் இந்தியாவும், 77-இல் ஆஸி.யும் வென்றுள்ளன. 10 ஆட்டங்களில் முடிவில்லை. 5 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

உலகக் கோப்பைக்கு பின் இரு அணிகளும் மீண்டும் மோதுவதால் ஒருநாள் தொடா் மீது மிகுந்த எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com