இரட்டைச் சதம் எடுத்த பெங்களூர் மைதானத்தில் நாளை விளையாடுவாரா ரோஹித்சர்மா?

2013 நவம்பரில் பெங்களூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 209 ரன்கள் எடுத்தார் ரோஹித் சர்மா...
இரட்டைச் சதம் எடுத்த பெங்களூர் மைதானத்தில் நாளை விளையாடுவாரா ரோஹித்சர்மா?

இந்தியாவுக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. 2-வது ஒருநாள் ஆட்டம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 49.1 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது ஒருநாள் ஆட்டம் பெங்களூரில் நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது இந்திய வீரர் ரோஹித் சர்மாவுக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் பெங்களூரில் நாளை நடைபெறும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் விளையாடுவாரா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

காயம் குறித்து ரோஹித்திடம் விசாரித்தேன். பெரிதளவில் பிரச்னையில்லை. 3-வது ஒருநாள் ஆட்டத்தில் அவர் விளையாடுவார் என கோலி நேற்று பேட்டியளித்தார்.

எனினும் ரோஹித் சர்மாவின் காயத்துக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரு ஒருநாள் ஆட்டங்களுக்கு இடையில் ஒரு நாள் மட்டுமே இடைவெளி இருப்பதால் நாளைய ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா விளையாட வேண்டுமா என்கிற கேள்வியும் இன்னொரு பக்கம் எழுந்துள்ளது.

அடுத்த வாரம் இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதுபோன்று முக்கியமான தொடர்கள் இருப்பதால் காயம் காரணமாக ரோஹித்துக்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

எனினும் பெங்களூர் மைதானம் ரோஹித் சர்மாவுக்கு மிகவும் ராசியான ஒன்று. அந்த மைதானத்தில் ரோஹித் சர்மா விளையாடிய 3 இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம் மற்றும் 1 அரை சதம். 

2013 நவம்பரில் பெங்களூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 209 ரன்கள் எடுத்தார் ரோஹித் சர்மா. 2010-ல் நியூஸிலாந்துக்கு எதிரான 44 ரன்களும் 2017-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 65 ரன்களும் எடுத்தார். இதனால் தனக்கு ராசியாக உள்ள மைதானத்தில் மீண்டும் விளையாடவே ரோஹித் சர்மா விரும்புவார் எனத் தெரிகிறது. எனினும் அவர் நாளை விளையாடுவாரா மாட்டாரா என்பது அவருடைய காயத்தின் தன்மை பொறுத்துதான் முடிவெடுக்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com