முகப்பு விளையாட்டு செய்திகள்
2021 ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியில் தோனி இருப்பார்: என். சீனிவாசன் தகவல்!
By எழில் | Published On : 20th January 2020 12:42 PM | Last Updated : 20th January 2020 12:42 PM | அ+அ அ- |

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவிப்பாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியிருந்தாா். இந்நிலையில் 2019-20 ஆண்டுக்கான 27 வீரா்கள் பெயா்கள் கொண்ட ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் தோனியின் பெயா் நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2021 ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியில் தோனி இருப்பார் என அந்த அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் தகவல் தெரிவித்துள்ளார். ஒரு விழாவில் அவர் கூறியதாவது:
இன்னும் எவ்வளவு காலம் தோனி விளையாடுவார் என்று மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர் விளையாடுவார். அதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். இந்த வருடம் அவர் விளையாடுவார். அடுத்த வருடம் அவர் ஏலத்துக்குச் செல்வார். அப்போது அவர் சிஎஸ்கே அணியால் தக்கவைத்துக்கொள்ளப்படுவார். எனவே யாரிடமு இதுகுறித்து எந்தச் சந்தேகமும் இல்லை என்றார்.