யு-19 உலகக் கோப்பை: ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
புகைப்படம்: டிவிட்டர்
புகைப்படம்: டிவிட்டர்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 234 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணிக்கு முதல் ஓவரே மிக மோசமாக அமைந்தது. இன்னிங்ஸின் முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் ஜேக் ஃப்ரேசர் ரன் அவுட் ஆனார். இதையடுத்து, அதே ஓவரில் கேப்டன் மெக்கன்சி ஹார்வே மற்றும் லாச்லன் ஹியர்ன் ஆகியோரை இந்தியப் பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி வீழ்த்தினார். இதனால், ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரிலேயே வெறும் 4 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இந்தச் சரிவில் இருந்து மீண்டு வருவதற்குள், ஆலிவர் டேவிஸ் விக்கெட்டையும் தியாகி கைப்பற்றினார். இதன்பிறகு, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சாம் ஃபேனிங்குடன் விக்கெட் கீப்பர் பாட்ரிக் ரோவ் இணைந்தார். இந்த இணை ஓரளவு பாட்னர்ஷிப் அமைத்தது. இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில் பாட்ரிக் ரோவ்வையும் (21 ரன்கள்) தியாகி ஆட்டமிழக்கச் செய்தார். 

இதனால், அந்த அணி மிகவும் இக்கட்டான நிலையைச் சந்தித்தது. இதன் காரணமாக சாம் ஃபேனிங் மற்றும் லியாம் ஸ்காட் நிதான ஆட்டத்தைக் கையாண்டனர். இந்த நிதானம் நீண்ட நேரம் நீடிக்க ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இந்த இணை 6-வது விக்கெட்டுக்கு 20 ஓவர்களில் 81 ரன்கள் சேர்த்திருந்தபோது லியாம் ஸ்காட் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, அரைசதம் அடித்து ஆறுதல் அளித்து வந்த சாம் ஃபேனிங்கும் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, கடைசி இரண்டு விக்கெட்டுகளை ஆகாஷ் சிங் அடுத்தடுத்து வீழ்த்த ஆஸ்திரேலிய அணி 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணித் தரப்பில் கார்த்திக் தியாகி 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com