இந்தியா vs நியூஸிலாந்து: சூப்பர் ஓவரில் எடுத்த ரன்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?

கேன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு சூப்பர் ஓவரில் 11 ரன்கள் எடுத்தார்...
இந்தியா vs நியூஸிலாந்து: சூப்பர் ஓவரில் எடுத்த ரன்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் ஹேமில்டனில் நேற்று நடைபெற்றது. ஆக்லாந்தில் நடைபெற்ற இரு டி20 ஆட்டங்களையும் வென்று 2-0 என டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை வகித்ததால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் நியூஸிலாந்து அணிக்கு இருந்தது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 65 ரன்கள் எடுத்தார். பிறகு விளையாடிய நியூஸிலாந்து அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமன் ஆனது. பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 17 ரன்கள் எடுத்தது. செளதி வீசிய சூப்பர் ஓவரில், கடைசி இரு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்கிற நிலையில் இரு சிக்ஸர்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் ரோஹித் சர்மா. இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்குக் கிடைத்தது. 

இந்நிலையில் நேற்றைய டி20 ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு சூப்பர் ஓவரில் 11 ரன்கள் எடுத்தார். இதனால் அவர் நேற்று சதமடித்ததாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?

ரோஹித் சர்மா நேற்று முதலில் 65 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு சூப்பர் ஓவரில் 15 ரன்கள் எடுத்தார். 65 ரன்கள் எடுத்தபோது 3 சிக்ஸர்களும் சூப்பர் ஓவரில் 2 சிக்ஸர்களும் எடுத்தார். இவையெல்லாம் ரோஹித் சர்மாவின் கணக்கில் சேருமா?

பும்ரா நேற்று மோசமாகப் பந்துவீசி, 4 ஓவரில் 45 ரன்கள் கொடுத்தார். பிறகு சூப்பர் ஓவரில் ஒரு ஓவரில் 17 ரன்கள் கொடுத்தார். இதுவும் பும்ராவின் கணக்கில் சேருமா?

மூன்றுக்கும் பதில் - இல்லை.

சூப்பர் ஓவர் என்பது ஆட்டத்தின் முடிவுக்கான ஒரு நடைமுறை மட்டுமே. மற்றபடி சூப்பர் ஓவரில் எடுக்கப்படும் ரன்களும் விக்கெட்டுகளும் சிக்ஸர்களும் வீரர்களின் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அதாவது, நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா 65 ரன்கள் எடுத்ததும் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்ததும்தான் பதிவாகும். இதர ரன்களும் பந்துவீச்சாளர்கள் எடுத்த விக்கெட்டுகளும் கொடுத்த ரன்களும் கணக்கில் சேராது. எனவே வீரர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் அணியின் வெற்றிக்காக மட்டுமே. தனிநபர் கணக்குகளில் அவற்றுக்கு இடமில்லை.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com