4-வது டி20 ஆட்டத்தில் தடுமாறும் இந்திய அணி!

இந்திய அணி 12 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. 
4-வது டி20 ஆட்டத்தில் தடுமாறும் இந்திய அணி!

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 ஆட்டம் வெல்லிங்டனில் இன்று நடைபெற்று வருகிறது.

இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்சன் இன்றைய ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார். எனவே, வில்லியம்சனுக்குப் பதிலாக டிம் செளதி கேப்டனாகச் செயல்படுகிறார். 

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. வில்லியம்சன், கிராண்ட்ஹோமுக்குப் பதிலாக டாம் ப்ரூஸ், டேரில் மிட்செல் ஆகியோர் நியூஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்திய அணியில் மூன்று மாற்றங்கள். ரோஹித் சர்மா, ஷமி, ஜடேஜாவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

தொடக்க வீரர்களாக ராகுலும் சஞ்சு சாம்சனும் களமிறங்கினார்கள். 2-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த சஞ்சு சாம்சன், இன்னொரு சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு கே.எல். ராகுல் சிக்ஸரும் பவுண்டரிகளும் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை நகர்த்தினார். அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்த கோலி, பென்னட் பந்துவீச்சில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். களமிறங்கியது முதல் தடுமாற்றத்துடன் விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர், 7 பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்திய அணிக்கு ஒரே நம்பிக்கையாக இருந்த கே.எல். ராகுல் சிக்ஸர் அடிக்க முயன்று 26 பந்துகளில் 39 ரன்களுடன் சோதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். என்னால் எந்த மைதானத்திலும் சிக்ஸர் அடிக்க முடியும் என்று பேட்டியளித்த ஷிவம் டுபே, 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களில் சோதி பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர், சான்ட்னர் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். முதல் மூன்று டி20 ஆட்டங்களிலும் அசத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று மிகவும் ஏமாற்றம் அளித்தார்கள். 

இந்திய அணி 12 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com