ஆசிய கோப்பை 2020 ரத்து: கங்குலி தகவல்

இந்த வருட டி20 ஆசியக் கோப்பைப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார். 
ஆசிய கோப்பை 2020 ரத்து: கங்குலி தகவல்

இந்த வருட டி20 ஆசியக் கோப்பைப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார். 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த வருட செப்டம்பரில் டி20 ஆசிய கோப்பைப் போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பைப் போட்டி எங்கு, எப்போது நடைபெறவேண்டும் என்பது குறித்து முடிவெடுப்பதற்காக இணையம் வழியாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள டி20 உலகக் கோப்பை பற்றி ஐசிசி தன் நிலைப்பாட்டை அறிவித்த பிறகு ஆசிய கோப்பைப் போட்டி குறித்த இறுதி முடிவை வெளியிடலாம் எனக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

டி20 ஆசிய கோப்பைப் போட்டியில் இந்தியாவும் பங்கேற்பதால் பாகிஸ்தானுக்குப் பதிலாக வேறு நாட்டில் போட்டி நடைபெறவேண்டிய சூழல் உள்ளது. 2018-ல் ஆசிய கோப்பை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடைபெற்றது.

இந்த வருட டி20 ஆசியக் கோப்பைப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதற்குப் பதிலாக இலங்கையில் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட உரிமையை இலங்கைக்கு வழங்கும் பாகிஸ்தான், 2022-ல் இலங்கையில் நடைபெறுவதாக உள்ள ஆசியக் கோப்பைப் போட்டியைத் தனது நாட்டில் நடத்தவும் திட்டமிட்டிருந்தது. 

2010-க்குப் பிறகு இலங்கையில் ஆசியக் கோப்பைப் போட்டி நடைபெற்றதில்லை. இதனால் பல வருடங்களுக்குப் பிறகு அந்த நாட்டில் ஆசியக் கோப்பை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருட ஆசியக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறுமா என்றும் கேள்விகள் எழுந்தன. 

இந்நிலையில் இந்த வருட டி20 ஆசியக் கோப்பைப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார். ஒரு இன்ஸ்டகிராம் பேட்டியில் கங்குலி கூறியதாவது:

ஆசிய கோப்பை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் அடுத்த சர்வதேசத் தொடர் எது என்பது தற்போது தெரியவில்லை. அரசு அனுமதி கிடைத்தால் தான் என்ன செய்யவேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவசரப்படவில்லை. வீரர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com