பாதுகாப்பு விதிமுறையை மீறி வீட்டுக்குச் சென்ற ஆர்ச்சர்: 2-வது டெஸ்டிலிருந்து அதிரடி நீக்கம்!

பேருந்தில் சென்றால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால் அனைவரும் அவரவர் காரில் சென்றுள்ளார்கள்...
பாதுகாப்பு விதிமுறையை மீறி வீட்டுக்குச் சென்ற ஆர்ச்சர்: 2-வது டெஸ்டிலிருந்து அதிரடி நீக்கம்!

பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், 2-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது. 

2-வது டெஸ்ட் ஆட்டத்துக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி முதலில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஆர்ச்சர் இடம்பெற்றிருந்தார். ஆனால் பாதுகாப்பு விதிமுறைகளை அவர் மீறியதால் தற்போது 2-வது டெஸ்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

செளதாம்ப்டனிலிருந்து மான்செஸ்டருக்குச் செல்லும் வழியில் விதிமுறையை மீறி தனது வீட்டுக்குச் சென்றுள்ளார் ஆர்ச்சர். ஒவ்வொரு வீரரின் அடையாள அட்டையில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த ஒரு வீரராவது பாதுகாப்பு விதிமுறையை மீறினால் கண்டுபிடித்துவிட முடியும். செளதாம்ப்டனிலிருந்து மான்செஸ்டருக்கு ஒவ்வொரு வீரரும் தனியாகச் சென்றுள்ளார்கள். பேருந்தில் சென்றால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால் அனைவரும் அவரவர் காரில் சென்றுள்ளார்கள். இதில், ஆர்ச்சர் மட்டும் செல்லும் வழியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றதால் தற்போது அவருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 2-வது டெஸ்டிலிருந்து நீக்கப்பட்ட ஆர்ச்சர், 5 நாள்கள் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. இந்த 5 நாள்களுக்குள் இருமுறை அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இரு பரிசோதனைகளின் முடிவுகளிலும் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று உறுதியான பிறகே அணியினருடன் இணைந்துகொள்ள அனுமதிக்கப்படுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com