3-வது டெஸ்ட்: மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 66/2

முதல் ஓவரிலேயே சிப்லியின் விக்கெட்டை வீழ்த்தினார் ரோச். ரன் எதுவும் எடுக்காமல் சிப்லி வெளியேறினார்.
3-வது டெஸ்ட்: மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 66/2

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து முதல் நாள் உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது. இந்த டெஸ்டை டிரா செய்தால் விஸ்டன் கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி தக்கவைத்துக் கொள்ளும். இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரை 2-1 என வென்றுவிடும். அயர்லாந்துடனான ஒரு டெஸ்ட் தொடரைத் தவிர்த்துப் பார்த்தால் கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் மட்டும் தான் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. அதனால் அந்த அணிக்கு இந்த வெற்றி மிக முக்கியமானதாக உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. எனினும் 2-வது டெஸ்டை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய பென் ஸ்டோக்ஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் டெஸ்ட் தொடர் 1-1 சமனில் உள்ளது. 3-வது டெஸ்ட், மான்செஸ்டரில் இன்று நடைபெறுகிறது. 

இந்நிலையில் இன்று தொடங்கியுள்ள 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அல்ஸாரி ஜோசப்புக்குப் பதிலாக ரகீம் கார்ன்வெல் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், பிராட், ஆர்ச்சர், வோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 

முதல் ஓவரிலேயே சிப்லியின் விக்கெட்டை வீழ்த்தினார் ரோச். ரன் எதுவும் எடுக்காமல் சிப்லி வெளியேறினார். இதன்பிறகு பர்ன்ஸ் - ரூட் ஓரளவு தாக்குப்பிடித்தது. ஆனால் 17 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார் ஜோ ரூட். 

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. பர்ன்ஸ் 33, ஸ்டோக்ஸ் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com