என் மீது அதிருப்தியில் இருந்தாரா ரஸ்ஸல்?: தினேஷ் கார்த்திக் பதில்

எதுவாக இருந்தாலும் அவரிடம் நேரடியாகப் பேசிவிடுவேன். அங்கேயே பிரச்னை முடிந்துவிடும்.
என் மீது அதிருப்தியில் இருந்தாரா ரஸ்ஸல்?: தினேஷ் கார்த்திக் பதில்

கடந்த வருட ஐபிஎல் போட்டியின் போது தன் மீது ரஸ்ஸல் அதிருப்தியில் இல்லை என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

2019 ஐபிஎல் போட்டியில் முதல் 5 ஆட்டங்களில் நான்கில் வெற்றியடைந்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (கேகேஆர்) அணி. பிறகு தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. பிறகு அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் வென்றது. எனினும் கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றுப்போனதால் புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடம் பிடித்து பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போய்விட்டது. 

ஐபிஎல் போட்டியின் பாதியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் நட்சத்திர பேட்ஸ்மேன் ரஸ்ஸல். ஒவ்வொரு முறையும் ஒரு ஓவருக்கு 14. 15 ரன்கள் அடிப்பது கடினமாக உள்ளது. நான் இன்னும் முன்பே களமிறங்க விருப்பப்படுகிறேன் என்றார். இதனால் கொல்கத்தா அணியில் பிளவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. 

இந்த விவகாரம் குறித்து கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளதாவது:

மிகவும் வெளிப்படையாகப் பேசும் குணம் உள்ளவர் ரஸ்ஸல். அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் உள்ளது. அதனால் நீங்கள் காயப்பட்டால் அது உங்கள் தவறு. அதைச் சரியாக விதத்தில் பார்த்தால், அப்படித்தான் நான் எடுத்துக்கொண்டேன். அவர் பேசியது குறித்து இருவரும் விவாதித்தோம். என் மீது அவருக்கு அதிருப்தி இல்லை. ஆனால் கொல்கத்தா அணி வெற்றியடையாமல் இருப்பது குறித்து வருத்தத்தில் இருந்தார். அதுதான் அவர் பேச்சின் அடிப்படை. 

தான் பேசியது எப்படி வெளியே புரிந்துகொள்ளப்பட்டது என்பதை அறிந்து அவர் சிறிது வருத்தப்பட்டார். அவருடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. எதுவாக இருந்தாலும் அவரிடம் நேரடியாகப் பேசிவிடுவேன். அங்கேயே பிரச்னை முடிந்துவிடும். அவர் சொன்னதும் அவர் சொன்னதாக மக்கள் படித்ததும் இரு வேறாக இருந்தன. ஓர் அணியில் வெவ்வேறு கருத்துகளை எதிர்கொள்வது ஒரு கேப்டனாக சவாலான விஷயம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com