முகப்பு விளையாட்டு செய்திகள்
டெஸ்ட் தரவரிசையில் 3-ம் இடத்துக்கு முன்னேறினார் ஸ்டூவர்ட் பிராட்
By DIN | Published On : 29th July 2020 02:41 PM | Last Updated : 29th July 2020 02:41 PM | அ+அ அ- |

ஐசிசி வெளியிட்டுள்ள பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஏழு இடங்கள் முன்னேறி 3-ம் இடம் பிடித்துள்ளார் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. எனினும் 2-வது டெஸ்டை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய பென் ஸ்டோக்ஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் டெஸ்ட் தொடர் 1-1 சமனில் இருந்தது. 3-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த டெஸ்டை 269 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி விஸ்டன் கோப்பையைக் கைப்பற்றியது. 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்த பிராட், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பிராடும் சேஸும் அவரவர் அணியின் தொடர் நாயகர்களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளார் ஸ்டூவர்ட் பிராட். 3-வது டெஸ்டில் 10 விக்கெட்டுகள் எடுத்ததால் இந்த நிலையை அவர் அடைந்துள்ளார். இதற்கு முன்பு ஆகஸ்ட் 2016-ல் 3ம் இடம் பிடித்தார். அதன்பிறகு இப்போதுதான் அதே இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஹோல்டர் 5-ம் இடத்திலும் இந்தியாவின் பும்ரா 8-ம் இடத்திலும் உள்ளார்கள்.