உம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ஷாருக் கான் அறிவித்துள்ள உதவிகள்!

உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மக்களுக்கு உதவ பிரபல நடிகர் ஷாருக் கான் முன்வந்துள்ளார்...
உம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ஷாருக் கான் அறிவித்துள்ள உதவிகள்!

உம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்துக்கு உதவிகளை அறிவித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான்.

வங்கக் கடலில் உருவான உம்பன் புயல் மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையைக் கடந்தது. அப்போது 190 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. கன மழையால் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான குடிசை வீடுகளும், பயிர்களும் சேதமடைந்தன. புயல் பாதிப்புக்கு அந்த மாநிலத்தில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல், புயலால் ஒடிஸா மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சேதத்தை உம்பன் புயல் ஏற்படுத்திவிட்டது. ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு மாநிலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். மத்திய மாநில, பேரிடர் மீட்புக் குழுவினருடன் ராணுவமும் புயல் பாதித்த இடங்களில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டது. மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000 கோடி நிவாரணத்தொகையை அறிவித்தார். இதேபோல புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸாவுக்கு ரூ.500 கோடியையும் பிரதமர் அறிவித்தார்.

இந்நிலையில் உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மக்களுக்கு உதவ பிரபல நடிகர் ஷாருக் கான் முன்வந்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மீர் அறக்கட்டளையும் முதல்வர் நிவாரண நிதிக்கு உதவியுள்ளதாக ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.

கேகேஆர் சஹாயதா வஹான் அமைப்பு, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வழங்கும் என்று அறிவித்த ஷாருக்கான், அந்த அமைப்பினர் வீடுகளை இழந்தவர்களுக்கும் உதவுவார்கள் என்று கூறியுள்ளார். இதுதவிர அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

கொல்கத்தா என்றால் உணர்வுதான். கொல்கத்தாவில் நட்பு, அன்பு, மகிழ்ச்சி போன்றவற்றைக் கண்டுள்ளேன். இவை எல்லாவற்றையும் விடவும் ஒற்றுமையும் குழு மனப்பானமையும் இங்குக் கற்றுக்கொண்டேன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸுடனான பயணம் என்பது வாழ்க்கையைப் போல, மேடுகளும் பள்ளங்களும் அமைந்தது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சிறந்த நாள்கள், மோசமான நாள்கள் அமைந்துள்ளன. ஆனால் மைதானத்தில் அனைவரும் நம்பிக்கையுடன் தான் இருப்போம். இப்போது நாம் கடினமான சூழலை எதிர்கொண்டாலும் என்னுடைய அனுபவமும் படிப்பினையும் எனக்குக் கற்றுக்கொடுத்தது என்னவென்றால், ஓர் அணியாக ஒன்று திரண்டு நிற்கும்போது கூடுதல் பலம் கிடைக்கிறது. ஒற்றுமையுடனும் தைரியத்துடனும் இருந்து போராடி வெற்று பெறுவோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com