கரோனா மாற்று வீரருக்கு அனுமதி வழங்கியது ஐசிசி: புதிய விதிமுறைகள் வெளியீடு

கரோனா அறிகுறிகள் எந்தவொரு வீரரிடமாவது தென்பட்டால் மாற்று வீரரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
கரோனா மாற்று வீரருக்கு அனுமதி வழங்கியது ஐசிசி: புதிய விதிமுறைகள் வெளியீடு

டெஸ்ட் ஆட்டத்தில் கரோனா மாற்று வீரருக்கு அனுமதியளித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் மீண்டும் தொடங்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளைச் சமீபத்தில் வெளியிட்டது ஐசிசி.

மைதானத்தில் நடுவர்களும் வீரர்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும். நடுவரிடம் தொப்பி, கண்ணாடி, துண்டு ஆகியவற்றை வீரர்கள் இனிமேல் தரக்கூடாது. சக வீரர்களிடமும் அவற்றைத் தர தடை செய்யப்படுகிறது என இதுபோன்ற பல்வேறு விதிமுறைகளை வெளியிட்டது. விளையாட்டில் பங்கு பெறும் வீரர் யாருக்காவது கரோனா அறிகுறிகள் இருந்தாலோ அல்லது வைரஸ் தொற்று உறுதியானாலோ உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். இதையடுத்து இரு அணி வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஐசிசி விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

டெஸ்ட் ஆட்டத்தின் நடுவில் கரோனா வைரஸால் எந்த வீரராவது பாதிக்கப்பட்டால் அவருக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஐசிசிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.

இதனை ஏற்றுக்கொண்ட ஐசிசி, டெஸ்ட் ஆட்டத்தில் கரோனா அறிகுறிகள் எந்தவொரு வீரரிடமாவது தென்பட்டால் மாற்று வீரரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

அதேபோல பந்தைப் பளபளப்பாக்க உமிழ்நீரைப் பயன்படுத்தவும் ஐசிசி தடை விதித்துள்ளது. ஆரம்பத்தில் வீரர்கள் சூழலைப் பழகிக் கொள்வதற்காக சில சலுகைகளை நடுவர்கள் அளிப்பார்கள். ஆனால் தொடர்ந்து இந்தத் தவறைச் செய்தால் அணிக்கு எச்சரிக்கை விடப்படும். ஒரு இன்னிங்ஸில் 2 முறை எச்சரிக்கை அளிக்கப்படும். ஆனால் தொடர்ந்து உமிழ்நீரைப் பயன்படுத்தி பந்தைப் பளபளப்பாக்கினால் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

2002-க்குப் பிறகு முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் உள்ளூர் நடுவர்கள் மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளார்கள். கரோனா அச்சுறுத்தல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டு நடுவர்கள் பணிபுரிவதில் சிக்கல்கள் இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உள்ளூர் நடுவர்களுக்கு அனுபவம் குறைவு என்பதால் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் கூடுதலாக ஒரு டிஆர்எஸ் முறையீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு 3 முறையீடுகளும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களுக்கு இரு முறையீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com