கேரள அணியில் நிச்சயம் விளையாடுவேன்: பயிற்சியாளரின் பேட்டியால் குஷியான ஸ்ரீசாந்த்

கேரள அணியில் நான் விளையாடுவதை அனைவரும் பார்ப்பீர்கள் என கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
படம் - ஏபி
படம் - ஏபி

கேரள அணியில் நான் விளையாடுவதை அனைவரும் பார்ப்பீர்கள் என கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

ஸ்ரீசாந்தின் தடைக்காலம் செப்டம்பரில் முடிந்தபிறகு அவரை கேரள ரஞ்சி அணியில் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி கேரள அணியின் புதிய பயிற்சியாளர் டினு யோஹண்ணன் கூறியதாவது: 

செப்டம்பரில் தடைக்காலம் முடிந்தபிறகு ஸ்ரீசாந்தை கேரள அணியில் சேர்த்துக்கொள்ள கேரள கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. அவருடைய உடற்தகுதியைக் கருத்தில் கொண்டு தான் அவரை அணியில் தேர்வு செய்ய முடியும். தனது உடற்தகுதியை அவர் நிரூபிக்க வேண்டும். ஊரடங்குச் சமயத்தில் மைதானத்துக்குச் சென்று யாராலும் பயிற்சி பெற முடியாத நிலையில் அவருடைய உடற்தகுதி பற்றி தற்போது எதுவும் கூறமுடியாது. 

கேரள அணிக்காக ஸ்ரீசாந்த் மீண்டும் விளையாட வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். அவரை வரவேற்கிறோம். அவருடைய திறமையை ஏற்கெனவே உலகுக்கு நிரூபித்துவிட்டார். அதனால் இப்போது புதிதாக எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்குக் கிடையாது. அவருக்கான அனைத்து ஆதரவையும் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:

அதிகாரபூர்வ அறிவிப்பு செப்டம்பரில் வெளியாகும். என்னுடைய பயிற்சியை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். கேரள கிரிக்கெட் சங்கத்தில் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளார்கள். தேர்வுக்குழுவினரும் பயிற்சியாளரும் நான் அணியில் விளையாட வேண்டும் என விரும்புகிறார்கள்.

நான் நல்ல உடற்தகுதியுடன் உள்ளேன். கேரள அணியில் நான் விளையாடுவதை அனைவரும் பார்ப்பீர்கள். நான் அணியில் இருப்பேன் என்பது நிச்சயமாகியுள்ளது. செப்டம்பரில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும். எனவே அதற்கான விதிமுறைகளை நான் பின்பற்றவேண்டும். ஏழு வருடங்களாக கிரிக்கெட் ஆட்டங்களில் நான் பங்கேற்கவில்லை. கிரிக்கெட் நிறைய மாறிவிட்டது. நாட்டுக்காக நான் விளையாடிய காலகட்டத்தை இப்போதும் எண்ணிப் பார்ப்பேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com