பிரதமரின் நடவடிக்கைகளைச் சிறுமைப்படுத்தும் எண்ணம் துளியும் கிடையாது: மன்னிப்பு கோரினார் சிஎஸ்கே அணி மருத்துவர்

நமது பிரதமரின் நடவடிக்கைகளையோ மத்திய அரசையோ ராணுவத்தினரையோ...
பிரதமரின் நடவடிக்கைகளைச் சிறுமைப்படுத்தும் எண்ணம் துளியும் கிடையாது: மன்னிப்பு கோரினார் சிஎஸ்கே அணி மருத்துவர்

லடாக் பிரச்னை மற்றும் பிஎம் கோ்ஸ் குறித்து தவறாக ட்வீட் வெளியீட்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளார், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மருத்துவர் மது தொட்டபிளில்.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே திங்கள்கிழமை இரவு திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

கரோனா நோய்த்தொற்று நிவாரண நடவடிக்கைகளுக்கு பொது மக்கள், நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டுவதற்காக பிஎம் கோ்ஸ் என்ற அறக்கட்டளையை மத்திய அரசு கடந்த மாா்ச் மாதம் உருவாக்கியது. அறக்கட்டளையின் தலைவராக பிரதமரும், உறுப்பினா்களாக பாதுகாப்பு, மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சா்களும் உள்ளனா். 

இந்நிலையில் லடாக் பிரச்னை குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் ட்வீட் பதிவிட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மருத்துவர் மது தொட்டபிளில் இடைநீக்கம் செய்யப்பட்டார். லடாக் பிரச்னை மற்றும் பிஎம் கோ்ஸ் ஆகியவற்றைக் குறித்து தவறான கருத்தை வெளிப்படுத்தியதாகக் கூறி சிஎஸ்கே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி சிஎஸ்கே ட்வீட் வெளியிட்டுள்ளதாவது:

மது தொட்டபிளில் வெளியிட்ட ட்வீட் குறித்து சிஎஸ்கே நிர்வாகம் அறிந்திருக்கவில்லை. சிஎஸ்கே அணியின் மருத்துவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எங்களுடைய கவனத்துக்குக் கொண்டுவரப்படாமல் வெளியிடப்பட்ட அவருடைய தவறான ட்வீட்டுக்காக வருந்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய ட்வீட்டுக்கு மன்னிப்பு கோரியுள்ளார் மது தொட்டபிளில். அவர் கூறியதாவது:

கடந்த 16-ம் தேதி ஒரு ட்வீட் ஒன்றை வெளியிட்டேன். அதன்பிறகுதான் நான் பயன்படுத்திய வார்த்தைகள் பொருத்தமற்றதாக இருப்பதாக உணர்ந்தேன். அதனால் அந்த ட்வீட்டை நீக்கினேன். ஆனால் என்னுடைய ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டன.

நமது பிரதமரின் நடவடிக்கைகளையோ மத்திய அரசையோ ராணுவத்தினரையோ அல்லது அவர்களின் தியாகத்தையோ சிறுமைப்படுத்தும் எண்ணம் துளியும் கிடையாது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளையும் ராணுவ வீரர்களின் துணிச்சலையும் எப்போதும் மதித்துள்ளேன். 

என்னுடைய ட்வீட்டைப் படித்த பலருடைய மனத்தையும் நான் காயப்படுத்தியுள்ளேன். அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். கவனக்குறைவாகவும் தவறாகவும் நான் ட்வீட் செய்துவிட்டேன். நான் சார்ந்துள்ள எந்த தனிநபரையோ அல்லது எந்த நிறுவனத்தையோ அந்த ட்வீட்டுடன் தொடர்புபடுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com