முகப்பு விளையாட்டு செய்திகள்
சச்சின் மகன் என்பதால் அர்ஜூன் டெண்டுல்கர் எந்தச் சலுகையும் அனுபவிக்கவில்லை: ஆகாஷ் சோப்ரா
By DIN | Published On : 27th June 2020 03:46 PM | Last Updated : 27th June 2020 03:47 PM | அ+அ அ- |

நடிகர் சுசாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு வாரிசுகள் அனுபவிக்கும் சலுகைகள் குறித்த விவாதம் அதிகமாகியுள்ளது.
கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் ஜூன் 14 அன்று தற்கொலை செய்துகொண்டாா்.
பாலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால் புதிய திறமைகளுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை, இக்காரணங்களால் சுசாந்த் சிங் போன்ற நடிகர்கள் மன உளைச்சல் அடைந்து இந்த முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள் எனச் சமூகவலைத்தளங்களில் வாரிசு நடிகர்களுக்கு எதிராக ரசிகர்கள் பதிவுகள் எழுதி வருகிறார்கள். பாலிவுட்டில் வாரிசுகளுக்கு வழங்கப்படும் சலுகைகளும் வாய்ப்புகளும் இப்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
கிரிக்கெட்டில் அதுபோல கிடையாது என்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
சுனில் கவாஸ்கர் மகன் என்பதால் ரோஹன் கவாஸ்கர் இந்திய அணிக்காக நிறைய ஆட்டங்களில் விளையாடவில்லை.
பெங்கால் அணிக்காகச் சிறப்பாக விளையாடியதால் தான் இந்திய அணிக்குத் தேர்வானார். பெயரில் கவாஸ்கர் என இருந்தாலும் மும்பை ரஞ்சி அணிக்காக அவர் விளையாடவில்லை.
அதேபோல அர்ஜூன் டெண்டுல்கரையும் சொல்லலாம். சச்சின் மகன் என்பதால் எதுவும் அவருக்குத் தட்டில் வைத்து வழங்கப்படவில்லை. இந்திய அணியில் அவரால் எளிதில் நுழைய முடியவில்லை. கீழ்மட்ட அளவில் வேண்டுமால் சில சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம். ஆனால் இந்திய யு-19 அணியில் கூட இதுபோன்ற பயனில்லாத தேர்வுகள் செய்யப்படுவதில்லை. ஒருவர் எப்போது தேர்வு செய்யப்பட்டாலும் அது அவருடைய திறமையினால் கிடைத்ததாகவே இருக்கும். ஒருவருடைய மகன், உறவினர் என்பதற்காக யாருக்கும் ஐபிஎல்-லில் ஒப்பந்தம் கிடைத்ததில்லை என்றார்.